பாகிஸ்தான் படைகள் நெருங்கிய போதிலும் காஷ்மீருக்குள் ராணுவத்தை அனுப்ப ஆர்வம் இன்றி முன்னாள் பிரதமர் நேரு இருந்தார் என பாஜக.,வின் மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் முதலாவது பிரதமர் ஜவகர்லால்நேருவுக்கும், முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார்வல்லபாய் படேலுக்கும் இடையிலான கருத்துவேறுபாடு பற்றி அத்வானி தமது வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

ஹைதராபாத்துக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையை வலியுறுத்திய படேலை நேரு மதவாதி என விமர்சித்ததாக கடந்த 5ந்தேதி அத்வானி எழுதியிருந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று தனது வலைத்தளபக்கத்தில் அத்வானி புதியதகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 1948ம் ஆண்டு நடந்த அச்சம்பவம் குறித்து அப்போது ராணுவகர்னலாக இருந்த சாம்மானக்ஷா அளித்த பேட்டியை மேற்கோள்காட்டி அத்வானி எழுதியிருப்பதாவது:

கடந்த 1948ம் ஆண்டு காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க விரும்பினார். இதுதொடர்பான இணைப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

அதுபிடிக்காமல் காஷ்மீரை கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான்படைகள் விரைந்தன. பாகிஸ்தான் படைகளின் ஆதரவுபெற்ற பழங்குடியினர் ஸ்ரீ நகரை நெருங்கினர்.

அப்போது அமைச்சரவை கூட்டப்பட்டது. காஷ்மீரில் நிலவும்சூழ்நிலை குறித்து சாம்மானக்ஷா விளக்கி கூறினார். அங்கு இந்தியபடைகளை அனுப்பவேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.

ஆனால் அங்கு படைகளை அனுப்ப நேருவுக்கு ஆர்வம்இல்லை. இப்பிரச்சினையை ஐநா.வுக்கு எடுத்துச்செல்லலாம் என்று வழக்கம்போல கூறினார்.உடனே சர்தார் வல்லபாய்படேல் பொறுமை இழந்தார். அவர் நேருவைப்பார்த்து, ஜவகர்லால், உங்களுக்கு காஷ்மீர் வேண்டுமா அல்லது அதை விட்டுக்கொடுக்க விரும்புகிறீர்களா? என கேட்டார்.

அதற்கு நேரு, காஷ்மீர்வேண்டும் என கூறினார். உடனே படேல், அப்படியானால், தயவு செய்து உத்தரவு தாருங்கள் என்று கூறினார். அதற்கு நேரு பதில் அளிப்பதற்குள் படேல், சாம் மானக்ஷாவை பார்த்து, உங்களுக்கு உத்தரவு கிடைத்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து, பாகிஸ்தான் படைகளுடன் போரிடுவதற்காக, ஸ்ரீ நகருக்கு இந்தியபடைகள் பறந்துசென்றன என்று அத்வானி எழுதியுள்ளார்.

Leave a Reply