மத்தியில் 3வது அணி அமைவது சாத்தியமில்லாதது, இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கருத்தில் தமிழ்நாடு பாஜக உறுதியாக இருக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கருத்தில் தமிழ்நாடு பாஜக உறுதியாக இருக்கிறது. அகிலஇந்திய தலைமையிடம் எங்களது கருத்தை தெரிவித்திருக்கிறோம். அவர்கள் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து பாஜக.,வைச் சேர்ந்த தமிழக தலைவர்கள் சிலர் தங்களதுகருத்தை தெரிவித்துள்ளனர். அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்.

பாட்னா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு பாஜக.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதனை காங்கிரஸ்கட்சி அலட்சியப்படுத்துகிறது. மோடிக்கு பாதுகாப்பு அளிப்பது மத்திய அரசின்கடமை.

மத்திய அமைச்சர்கள் ஜிகே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயண சாமி ஆகியோர் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது எனக்கூறி தங்களது எதிர்ப்பை பதிவுசெய்துள்ள நிலையில், முக்கிய பொறுப்பில் உள்ள ப.சிதம்பரம் இதுவரை தனதுகருத்தை தெரிவிக்கவில்லை. தமிழர்களின் நலனுக்காக எப்போதும் அவர் குரல்கொடுத்தது கிடையாது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து பேசியபிறகுதான் இலங்கையில் தமிழர்கள்மீதான தாக்குதல் அதிகரித்தது.

அவர்கள் இருவரும் சந்தித்துபேசியது குறித்து அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாமல் இருந்திருக்காது. எனவே, நளினி- பிரியங்கா பேசியது என்ன என்பதை கருணாநிதி வெளியிடவேண்டும் என்றார் அவர்.

Leave a Reply