திமுகவை நாங்கள் கூட்டணிக்கு அழைக்க வில்லை நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று, எங்களோடு இணைந்து உழைக்க தயாராக இருக்கும் கட்சிகளைத் தான் அணியில்சேர்ப்போம். என்று தமிழக பாஜக. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் .

பல்வேறு கட்சியினர், மதபோதகர்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் பாஜக.வில் இணையும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் சனிக் கிழமை நடந்தது.

ஐக்கிய ஜனதாதள நிர்வாகி தர்மன்யாதவ், தே.மு.தி.க.,வை சேர்ந்த பெரியகுளம் சாகுல்ஹமீது, தஞ்சை திமுக கிளைச்செயலர் நஸீர் கான், ஜெருசலேம் ஜெபக் குழுத் தலைவர் ஆல்பர்ட், 20 கிறிஸ்தவ மத போதகர்கள்
பிரதமர் அலுவலக நிதி ஆலோசனைப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐஏஎஸ். அதிகாரி நாராயணன் மற்றும் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தலைமையில் 50க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உள்பட 100க்கும் அதிகமானோர் பாஜக. மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

பின்னர், நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக பாஜக. நிர்வாகிகளுக்கு தேர்தல்தொடர்பான பயிற்சிக்கூட்டம், திருச்சியில் வரும் 3ம் தேதி நடக்க உள்ளது. இலங்கை கடற்படையால், தமிழகமீனவர்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து, பாம்பனில் ஜனவரி 31ம் தேதி கடல்தாமரை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், பாஜக. நாடாளுமன்ற தலைவர் சுஷ்மாஸ்வராஜ் பங்கேற்கிறார்.

தமிழகத்திலிருந்து ஒருவர் நாட்டுக்கு தலைமையேற்க காலம்கனிந்திருக்கிறது என்று அ.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, அவர்களின் உரிமை. இது குறித்து, மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

நாட்டுக்கு தலைமையேற்று, இந்தியத்தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்கள், தமிழக மீனவர்களுக்கு நல்லது செய்ய நரேந்திரமோடியால் மட்டுமே முடியும். அவர் தமிழராகவும் இருந்து தமிழர்களுக்கு நல்லதுசெய்வார்.

தி.மு.க.,வை நாங்கள் கூட்டணியில்சேர அழைக்கவில்லை. நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று, எங்களோடு இணைந்து உழைக்க தயாராக இருக்கும் கட்சிகளைத் தான் அணியில்சேர்ப்போம். தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு நான்குமாதங்கள் உள்ளதால், கூட்டணி தொடர்பாக யாரிடமும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply