எங்களது ஒரே இலக்கு இலங்கை தமிழர்களை கொன்றுகுவிக்க காரணமாக இருந்த காங்கிரசை மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறியவேண்டும் என்பது தான். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் வலிமையை பாஜக பெற்று இருக்கிறது

பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்து மதிமுக. பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. தொகுதிபங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று முறைப்படி தொடங்கியது.

இதில் பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கேஎன். லெட்சுமணன், மாநில பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு, மாநில பொதுச் செயலாளர் சரவணபெருமாள், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதிமுக. சார்பில் வைகோ, கணேசமூர்த்தி எம்.பி., சதன் திருமலைக்குமார், மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது வண்டலூரில் அடுத்தமாதம் (பிப்ரவரி) 8–ந் தேதி நடைபெறும் நரேந்திரமோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்புவிடுத்தார்.

அழைப்பை ஏற்றுக் கொண்ட வைகோ நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, எங்களது ஒரே இலக்கு 578 தமிழகமீனவர்களை கொன்று குவித்தபோதும் பாராமுகமாய் இருந்த காங்கிரசை, இலங்கை தமிழர்களை கொன்றுகுவிக்க காரணமாக இருந்த காங்கிரசை மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறியவேண்டும் என்பது தான். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் வலிமையை பாஜக பெற்று இருக்கிறது . நாடுமுழுவதும் மோடி அலை வீசுகிறது. நிச்சயமாக இந்த கூட்டணி வெற்றிபெறும். வருகிற தேர்தல் இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

Leave a Reply