ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. பணம்பெற்றவர்கள் யார் என்பதை காட்டுவதற்கு விரிவான ஆதாரங்களும் உள்ளன என பாஜக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. பணம்பெற்றவர்கள் யார் என்பதை காட்டுவதற்கு விரிவான ஆதாரங்களும் உள்ளன. ஹெலிகாப்டர் ஊழல்விவகாரத்தை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். ஏதாவது ஒருவிளக்கத்தை அளித்துவிட்டு மத்திய அரசு தப்பித்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலைப்போலவே ஹெலிகாப்டர் ஊழலும் நடைபெற்றுள்ளது” என்றார்.

பின்னணி: விஐபிக்களின் பயணத்துக்காக இத்தாலியைச்சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிமதிப்பில் 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஆர்டரை பெறுவதற்காக அந்நிறுவனம் இந்தியத்தரப்புக்கு ரூ.360 கோடி கமிஷன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவுசெய்த இத்தாலி போலீஸார், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன அதிகாரிகள் சிலரையும், இந்தபேரத்தில் இடைத் தரகர்களாக செயல்பட்ட சிலரையும் கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு இத்தாலியின் மிலன் நகர நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் பேரத்தில் முக்கிய இடைத் தரகராக செயல்பட்டதாக கூறப்படும் கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர், பீட்டர்புல்லெட் என்பவருக்கு அனுப்பிய ஃபேக்ஸ் கடிதத்தின் நகலை இத்தாலி நீதிமன்றத்தில் அந்நாட்டு போலீஸார் சமீபத்தில் சமர்ப்பித்தனர். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய அலுவலகத்துக்காக பணியாற்றிய பீட்டரிடம், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்கே.நாராயணன், பிரணாப் முகர்ஜி, வீரப்பமொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், வினய் சிங் உள்ளிட்ட தலைவர்களை அணுகுமாறு அந்தக்கடிதத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ஃபேக்ஸ் கடிதத்தின் நகலை, இவ்வழக்கை விசாரித்துவரும் இந்திய அதிகாரிகளிடமும் இத்தாலி போலீஸார் வழங்கியுள்ளனர்.

Leave a Reply