முன்னாள் துணைபிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அத்வானி சிலவருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது மதுரை அருகே அவர்செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தவழக்கில் முக்கிய குற்றவாளியான நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த பறவை பாதுஷா என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடிவந்தனர். 2 ஆண்டாக அவர் போலீசில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்தார்.

இவர் மதுரை பைப்வெடிகுண்டுக்கு வெடிபொருள் சப்ளைசெய்தவர் என போலீசார் குற்றம்சாட்டி இருந்தனர். இது தவிர நெல்லை மேலப்பாளையத்தில் வெடிகுண்டுபதுக்கியது, பெங்களூர் குண்டு வெடிப்புக்கு வெடிபொருள் சப்ளைசெய்தது, வேலூர் இந்து முன்னணி பிரமுகர் கொலையில் தொடர்பு என பல்வேறு வழக்குகள் உள்ளன.

பறவை பாதுஷாபற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்து இருந்தனர். வெடி மருந்து, ஆயுத தடைசட்டம், சதித் திட்டம் உள்பட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் பறவைபாதுஷா கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசியதகவல் கிடைத்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. தனிப் படை கேரளாவுக்கு சென்று அங்கு உள்ளூர் போலீசாருடன் இணைந்து பறவைபாதுஷா பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

அதிகாலையில் கேரளாவின் அஞ்சால் என்ற இடத்தில் உள்ள ஒருவீட்டை போலீஸ் படை சுற்றிவளைத்து அங்கு தங்கி இருந்த பறவை பாதுஷாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். உடனடியாக அவரை போலீசார் தமிழகத்துக்கு காரில் ஏற்றி அழைத்து வருகிறார்கள்.

நெல்லை, மதுரை ஆகிய இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்று வெடிகுண்டு வழக்குகள் பற்றி விசாரணை நடத்துகிறார்கள். இதற்காக அவரை மதுரை அழைத்துவருகிறார்கள். அதன்பிறகு நெல்லை கொண்டு செல்லப்படுகிறார்.

பின்னர் வேலூர் இந்து முன்னணி பிரமுகர், பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்குகள் பற்றியும் விசாரிக்கிறார்கள். வெடிகுண்டு வழக்கில் பறவை பாதுஷா சிக்கியிருப்பது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் மூலம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும். வேறு சிலரும் பிடிபடுவார்கள் என்று தெரிகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் வெடிகுண்டுகள் பதுக்கல் தொடர்பாக கிச்சான் புகாரி, போலீஸ் பக்ருதீன் உள்பட 19 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதுசெய்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேலப்பாளையம் பகுதியில் வீரமாணிக்கபுரம் ரவுண்டானாவில் நின்று கொண்டு இருந்த முகமதுதாசீன், சாகுல் அமீது ஆகியோரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்களிடம் வெடி குண்டுகள் சிக்கியது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலப்பாளையத்தில் ஒருவீட்டில் வெடி மருந்து, ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருள் கைப்பற்றப்பட்டனர். பதுக்கலில் முக்கிய பங்குவகித்த பறவை பாதுஷா அப்போது சிக்காமல் தப்பிவிட்டார்.

மேலும் 4 பேர் சிக்கினார்கள். அவர்களிடம் ஒருதுப்பாக்கி மற்றும் 53 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply