பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பிரபல இந்தி நாளேடு ஒன்றுக்கு சிறப்புபேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு

நாடு இப்போது முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 3–வது அணி என்பது நாடு பெரும் விலை கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடும். தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியதும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத்தக்கதுமான அரசு தான் மத்தியில் தேவை.

3வது அணி தேவை என்று வக்காலத்துவாங்குகிற அனைத்து அரசியல் கட்சிகளும், அடிப்படையில் காங்கிரசுக்கு எதிரானவை. ஆனால் அவையெல்லாம் ஒருநேரத்தில் அல்லது பிறிதொரு நேரத்தில், அரசியல் சந்தர்ப்பவாதம் காரணமாக, காங்கிரசுடன் கரம்கோர்க்க வேண்டிய வலுக்கட்டாயத்துக்கு ஆளாகின்றன.

நாட்டில் இப்போது காங்கிரசுக்கு எதிரானகோபம் வெளிப்படும் நேரத்தில், மூன்றாவது அணிக்காக உழைக்கிறவர்கள், ஒருவிதத்தில் உண்மையிலேயே காங்கிரசுக்கு உதவுகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.

அவர்கள் (மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு) ஊழல்வாதிகளாகவோ அல்லது தங்கள் சுயபலவீனங்களின் காரணமாக ஊழலுக்கு ஒப்புதல் அளிக்கிறவர்களாகவோ இருக்கிற போது, யார் ஊழலை தடுத்து நிறுத்தமுடியும்?

ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் (பிரதமர்) நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்கவேண்டும்.

ஊழலை வெறும் சட்டங்களால் மட்டுமே ஒழித்துவிட முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையிலேயே ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற இலட்சியம் இருக்க வேண்டும். அதற்கு அனுபவமும், வலிமையும் வாய்ந்த தலைமையும் (பிரதமர்) தேவை. ஊழலை வேரோடு வீழ்த்துவதற்கு இது அவசியம்.

அந்தவகையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைகிறபோது, ஊழலை சகித்துக் கொள்ளாத அளவில் கொள்கை வகுத்து பின்பற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்குகிறேன்.

அரசியல் எதிரிகள் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்கிறேன் என்று சொல்லப்படுவதாக கூறுகிறீர்கள். தனிப்பட்ட தாக்குதல்களை நான் நிறுத்தினாலும் கூட, நாட்டு நலனின் அடிப்படையில் மன்னராட்சி போன்ற பரம்பரை அரசியலை விமர்சிக்கிறேன். இதை தனிப்பட்ட விமர்சனமாக கருதி விடுகின்றனர்.

ஒரு சர்வாதிகாரி ஆகிற அளவுக்கு நான் துணிச்சல்மிக்கவன் என்று என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதை நான் நிராகரிக்கிறேன். நாட்டில் இந்த நாளில், முடிவுகள் எடுக்கமுடியாத நிலைதான் ஒழுங்கு முறை என்ற சூழல் உருவாகிவிட்டது. உறுதியான முடிவு எடுக்கிற தலைமை, இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது.

எந்த ஒருமுடிவையும் எடுப்பதற்கு முன்பாக அனைவருடனும் ஆலோசிக்க வேண்டியது அவசியம் என நம்புகிறேன். ஆனால் முடிவு எடுத்துவிட்ட பின்னர், அதை உரியகால வரையறைக்குள் அமல்படுத்திவிட வேண்டும் என்பது அவசியமானது. இல்லா விட்டால், நாம் முடங்கிப் போய் விட்டதாக ஆய்வாளர்களால் கருதப்படுவோம்.

மத்திய அரசு எல்லா மாநிலங்களையும் ஒரேமாதிரியாக நடத்துவதில்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும் ஓரணியில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வளர்ச்சி என்பது சாத்தியமாகும். பிரதமருக்கும், மாநில முதல்–மந்திரிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கவேண்டும்.

100 நாளில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்று கூறித் தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தது. ஆனால் ஆட்சிக்குவந்து 5 ஆண்டுகளாகியும் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்விகண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு, அனைத்து அரசு எந்திரங்களையும் அரசியல் ரீதியில் தவறாகப் பயன் படுத்தி வருகிறது. நல்ல நிர்வாகம் அல்லது நல்லாட்சி என்பது, அரசாங்கம் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிற போதுதான் அமையும்.

நாட்டின் வளங்களில் ஏழைகளுக்குத்தான் முதல் உரிமை என்பது தான் என் வலுவான கருத்து. ஏழைகளுக்கு மானியங்கள் தருவது நியாயமானது தான். இதை பிரச்சினை ஆக்கக் கூடாது.

ஆனால் இதில் முக்கியமாறுபாடு என்னவென்றால், காங்கிரசார் ஏழைகளை தங்களது ஓட்டு வங்கியாகக் கருதுகின்றனர். அதனால்தான் அவர்கள் ஏழைகளாகவே தொடரவேண்டும்; அரசாங்கத்தையே சார்ந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அப்போதுதான் தனது ஓட்டுவங்கி எப்போதும் நிலைத்திருக்கும் என அது கருதுகிறது.

ஆனால் ஏழைகள் வறுமைக்கு எதிராகப் போராட ஏற்ற விதத்தில் அதிகாரம் பெறவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

ஒருவலுவான நாடுதான் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பராமரிக்க முடியும். அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பராமரிக்கிற போது, நாட்டின் நலன்தான் முன்னிறுத்தப்படும்.

மக்கள் ஆதரவு அரசாக, நல்லாட்சி தருகிற அரசாக மத்தியில் அமையவேண்டும். நாட்டை விரைவான முன்னேற்றப் பாதையில் அது அழைத்துச் செல்ல வேண்டும். குஜராத்தைப்போன்று நாடு முழுவதும் 10 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி காணவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply