பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கொல்ல மனித வெடிகுண்டுகளாக செயல்பட இருந்த பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை உ.பி. போலீசார் கைதுசெய்துள்ளனர். இதன் மூலம் பெரும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
.

மக்களவை தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது முக்கிய தலைவர்களை கொல்ல பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது.

குறிப்பாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு எதிராக தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் புது டெல்லியில் இந்தியன் முஜாகிதீன் அமைப்புச்சேர்ந்த தற்காலிக தலைவர் தெசின் அக்தர் என்கிற மோனுவை கைதுசெய்தனர்.

பாட்னா மற்றும் புத்தகயாவில் மோடி கூட்டத்தில் குண்டு வெடிக்கச்செய்த சம்பவம் உள்பட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவன் மோனு நேபாள் எல்லையில் டெல்லி போலீசார் அவரை கைதுசெய்தனர். அவனிடம் நடத்திய தீவிர விசாரணையில் மூன்றுமுக்கிய சுற்றுலா மையங்களில் தீவிரவாதிகள் சதிச்செயலை நிறைவேற்ற இருப்பதாக தெரியவந்தது.

அவன்கொடுத்த தகவலையடுத்து உ.பி.,யின் கோரக்பூர் நகரில் ரெயில்வே நிலையம் அருகே 2 தீவிரவாதிகள் அம்மாநில தீவிரவாத தடுப்பு காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஒருவன் பெயர் பர்கத். மற்றொருவன் பெயர் முஜாம்மில். அவர்கள் இருவருமே பாகிஸ்தான் நாட்டில் உள்ள முல்டான் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ஏகே.47 நவீன ரக துப்பாக்கி, வெடி குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிமருந்துகள், மின்சாதனம் ஆகியவற்றையும் பறிமுதல்செய்தனர்.

கோரக்பூரில் மோடி பங்கேற்க இருக்கும் தேர்தல்பிரச்சார கூட்டத்தில் மனித வெடிகுண்டுகளாக மாறி அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் லக்னோவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகிறார்கள். அவர்கள் இருவருரிடமும் நடத்திய விசாரணையில் முக்கிய தலைவர்களை தீர்த்துக் கட்டும் நோக்கத்துடன் வந்துள்ளதாகவும் மனித வெடிகுண்டுகளாக செயல்பட இருந்ததாகவும் தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

மோடி வேட்பாளராக போட்டியிடும் வாரணாசியில் தங்கள் சதித் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்து உள்ளனர். புதுடெல்லி போலீசார் கொடுத்த தகவலை தொடர்ந்து இந்த இரண்டு தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரையும் கைதுசெய்ததின் மூலம் மோடி உள்பட முக்கிய தலைவர்களுக்கு எதிரான சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply