தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தும் ஜெயலலிதா எப்படிப்பிரதமர் ஆக முடியும்? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது. .நாள்தோறும் படிவாங்கும் படிக்காசு புலவர்கள் சிலர் ஜெயலலிதா பிரதமர், ஜெயலலிதா பிரதமர் என்று மேடைக்கு மேடை முழங்கி வருகிறார்கள்.

ஜெயலலிதா எப்படிப் பிரதமர் ஆக முடியும்?

ஒருவேளை அனைத்திந்தியக்கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு இருப்பதால், அனைத்து இந்தியாவிலும் போட்டியிடுகிறாரா? தமிழ்நாட்டில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தி வைத்துக்கொண்டு பிரதமர் கனவோடு பிரச்சாரத்தைத் தொடங்கினார். நாளுக்கு நாள் அந்தக்கனவு தகர்ந்துவருகிறது. இப்போது அப்படிச் சொல்லுவதை விட்டு விட்டார். ஆனால், அவரது அமைச்சர் அடிப்பொடிகள் இன்னமும் முழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

வேண்டுமானால், போயஸ் தோட்டத்தில் ஒருசெட் போடலாம். நாடாளுமன்றக் கட்டடம், லோக்சபா, ராஜ்யசபா, சென்ட்ரல்ஹால் போன்ற அரங்குகளை அமைத்துக் கொண்டு, அங்கே ஒரு நாற்காலியைப்போட்டு, அதில் பிரதமர் என்று எழுதிவைத்துக் கொண்டு, அதில் வேண்டுமானால் அமர்ந்து அழகு பார்த்துக் கொள்ளலாமே தவிர, ஜெயலலிதா ஒருக்காலும் பிரதமர் ஆக முடியாது.

இப்போது அவர், அதிமுக அங்கம்வகிக்கும் அமைச்சரவை என்று சொல்லத்தொடங்கி இருக்கின்றார். சரி. அதற்கும் வழி இருக்கிறதா? காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உதவியோடு ஆட்சி அமைத்துவிடலாம் என்று கருதுகிறாரா?

அதற்குவழியே இல்லை. பேச்சுவார்த்தை நடத்த வந்த கம்யூனிஸ்டுகளை அவமதித்து வெளியேற்றிவிட்டார். காங்கிரஸ் கட்சி இந்தமுறை இரண்டு இலக்கங்களை தாண்டமுடியாது. அதிகபட்சமாக 99 இடங்கள் தான். 100 கூடவராது. எனவே, அதற்கு வாய்ப்பே இல்லை.

பாரதிய ஜனதா மட்டுமே தனித்து 272 தொகுதிகளை கைப்பற்றும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 320 இடங்கள்கிடைக்கும். இதுதான் நிலைமை. நாளுக்கு நாள் நரேந்திரமோடி அலை பெருகிக்கொண்டே போகிறது. தமிழகம், புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் நமது அணியே வெற்றிபெறும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.என்றார் வைகோ.

Tags:

Leave a Reply