சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று தேர்தல்பிரசாரம் செய்த பாஜக.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ‘வறுமை என்பது ராகுலுக்கு சுற்றுலா போன்றது. நூறேநாட்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று கூறி மீண்டும் ஆட்சிக்கு வந்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது:-

திருமதி சோனியா காந்தியும், இளவரசரும் (ராகுல்) நாடுமுழுவதும் போய், அவர்கள் செய்தபணிகள் என்ன? என்று சொலவதற்கு பதிலாக, நான்செய்த பணிகள் என்ன? என்று மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2009-ல் அளித்த வாக்குறுதியைமீறி விலைவாசியை கட்டுப்படுத்த தவறியது ஏன்? என்று அவர்கள் பதில்அளிக்க மறுக்கிறார்கள்.

நூறேநாட்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று கூறி மீண்டும் ஆட்சிக்கு வந்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை.

ஜனநாயக மரபுகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. வாரிசுரிமையில் நம்பிக்கைவைத்து அதில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை சட்டைப்பையில் போட்டு எடுத்து செல்லலாம் என்று நினைக்கிறார்கள்.

சராசரி மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் காங்கிரஸ் கட்சிக்கு தெரிவதில்லை. வறுமையை பற்றி பேசுவதில் தனக்கு மனநிறைவு ஏற்படுவதாக இளவரசர் (ராகுல்) ஒருமுறை கூறியிருக்கிறார். வறுமை எனபது ஒரு மனநிலை என்பது அவரது நினைப்பாக உள்ளது. வறுமை என்ன கேளிக்கை பொருளா..?

இளவரசரே..! உங்களுக்கு வறுமை சுற்றுலாவைப்போன்றது. மக்கள் தாஜ் மகாலைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்வதைப்போல் டி.வி. கேமராக்கள் புடைசூழ அவர் ஏழைகளின் வீடுகளுக்கு சென்று வருகிறார். தங்க கரண்டியுடன் பிறந்த அவருக்கு வறுமையை பற்றி அதிகம் தெரிந்திருக்க முடியாது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் உ.பி.,யில் இருந்து உத்தராகண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டது. பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டது. அப்போது எல்லாம் எந்தப் பிரச்சனையும் எழவில்லை.

ஆனால், ஆந்திரமாநிலத்தை காங்கிரஸ் பிரித்தபோது மட்டும் தெலுங்கானாவிலும், சீமாந்திராவிலும் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுவருவதற்கு இதுவே சாட்சியாகும். அந்த கட்சி இந்த சமூகத்தை பிரித்து, துண்டுத் துண்டாக்கும் செயலில் ஈடுபட்டுவருகிறது.

காது கேளாத, பேச முடியாத, முட அரசாங்கம் மத்தியில் தேவையற்றது. வலிமையான அரசாங்கத்தை மக்கள் உருவாக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply