மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் வரும் 2022-ஆம் ஆண்டில் நாடு தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, அனைத்து மக்களுக்கும் வீடு, தடையற்ற மின்சாரம், அருகில் பள்ளிகள், சுகாதார வசதிகளை பெற்றிருக்கும் என்று உறுதி கூறுகிறேன் என்று, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

சேலம் இரும்பாலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தேமுதிகவின் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திரமோடி பேசியதாவது:

காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சிசெய்த போதிலும், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளுக்குகூட அவர்களால் தீர்வுகாண முடியவில்லை. மாறாக பிரச்னைகளை அதிகப்படுத்திய அவர்கள், இப்போது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்போவதாக கூறுகின்றனர்.

ஆனால், இந்த தேர்தல் வித்தியாசமானது. வாக்குவங்கி அரசியல் இப்போது எடுபடாது. வெறுமனே வாக்குறுதிகள் கொடுப்பதை காட்டிலும் அவற்றை செயலில்காட்டுவதே மேலானது என்பதை மக்கள் விரும்புகின்றனர். ஊழலற்ற, சுத்தமான இந்தியா உருவாகவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

சேலத்தில் 51சதம் மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். மொத்தமக்களில் 73 சதம் பேர் மட்டுமே கல்வி அறிவு பெற்றுள்ளனர். ஆனால், நாடுசுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்தச் சதவீதம் மிகவும் குறைவானது. மேலும், 65 சத மக்களுக்கு கழிப்பிடவசதி இல்லை. 55 சத வீடுகளுக்கு கழிவு நீர் வடிகால்வசதி இல்லை. ஆனால், நாங்கள் வாஜ்பாய் ஆட்சியில் முழு சுகாதாரத் திட்டம் கொண்டுவந்து, மக்களின் சுகாதார நலனுக்காக உழைத்தோம்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யாத திட்டங்களை 60 மாதங்களில் செய்துமுடிப்போம். வரும் 2022-ஆம் ஆண்டில் நாடு தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, அனைத்து மக்களுக்கும் வீடு, தடையற்ற மின்சாரம், அருகில் பள்ளிகள், சுகாதார வசதிகளை பெற்றிருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

சேலம் உருக்காலை உலகளவில் புகழ் பெற்றது. மலேசியாவின் இரட்டைக்கோபுரம், மெல்போர்ன் மைதானம் போன்றவை சேலம் இரும்பை கொண்டுதான் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இரும்புத்தாது அதிக அளவில் உள்ளது. ஆனால், அவற்றை நாம் ஏற்றுமதி செய்துவிட்டு, இங்குள்ள ஆலைகளுக்கான மூலப்பொருளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.

இதனால், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிக்கிறது. எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு நமது உற்பத்தியை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. எனவே, இங்குள்ள மூலப்பொருள்களை பயன்படுத்தி உள்நாட்டிலேயே இரும்பு தயாரித்து, அவற்றை சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், உருக்காலைகளை நவீனப்படுத்த வேண்டும்.

மர வள்ளி உற்பத்தியில் சேலம் உலகிலேயே முன்னிலையில் உள்ளது. ஆனால், மரவள்ளி விவசாயிகளோ பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தரமானவிதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைப்பதில்லை. நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளும் இதேபோல பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை தரப்பட்டுள்ளது.

நாடுமுழுவதிலும் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும். மேலும், நவீனவேளாண் உத்திகள், ஆங்காங்கே மண்பரிசோதனை மையங்கள், பயிர்க்காப்பீடுத் திட்டங்கள், உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் பெருக்கப்படும். இந்தியா முன்னேற வேண்டுமானால் விவசாயிகள் முதலில் முன்னேற்றம்பெற வேண்டும்.

தமிழகம் இப்போது மின் பற்றாக் குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதோடு, புதியதொழில் வாய்ப்புகளும் மங்கியுள்ளன. எனவே, விவசாயிகளும், தொழில் முனைவோரும் பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் மோடி.

Tags:

Leave a Reply