குஜராத்தில் 12 ஆண்டுகளாக மோடி தான் முதல்வர். அந்த மாநிலம் சிதறுண்டு போகவில்லை. வளர்ச்சி அடைந்துவருகிறது. அதுபோல பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு சிதறுண்டு போகாது என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வந்த அவர், தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியதாவது; மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருக்கிறது. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஆட்சிக்குவந்தாலும் ஒருவரையொருவர் பழிவாங்கவே நினைக்கின்றனர். இந்த இருகட்சிகளிடம் தமிழகம் சிக்கி சீரழிகிறது.

இந்நிலையில் தான், தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் வகையில் பாஜக தலைமையில் தே.ஜ., கூட்டணி உருவாகியிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க.,வுக்கு மாற்றாக உருவாகியுள்ள இந்த கூட்டணியை மக்கள் ஆதரிக்கவேண்டும்.

இளைஞர்கள் அரசியலுக்கு நிச்சயம் வரவேண்டும். அப்போது தான் மாற்றத்தையும், ஊழல் இல்லாத ஆட்சியையும் உருவாக்க முடியும். தமிழகத்தில் பாஜக. கூட்டணி நிச்சயம் 20 இடங்களை கைப்பற்றும்.

இந்திய – இலங்கை அரசின் ஒப்பந்தத்தின் படி இலங்கை தமிழர்களின் நலன்காக்க 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை இந்திய அரசு கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டது. மேலும் ராஜதந்திர ரீதியாகவும், ராஜீய ரீதியாகவும் இந்தியா தோல்வியடைந்து விட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் அண்டை நாடான இலங்கையுடன் நேச உறவு கொண்டு தமிழர்களைப் பாதுகாக்கவும், அமைதிக்கும் பாரதிய ஜனதா கட்சி பாடுபடும்.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், காவிரிப் பிரச்னையில் கர்நாடக மாநில அரசு எந்த நிலையை எடுத்தாலும், அதற்கு முக்கியத்துவம் தராமல் நெடுநாளாக நிலவிவரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சேதுசமுத்திரத் திட்டம் கைவிடப்படும்: மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் சேது சமுத்திர திட்டம் கைவிடப்படும். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 272-க்கு மேல் 300 இடங்களில் வென்று,அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். நரேந்திர மோடிதான் பிரதமர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளே போதுமானது. தேர்தலுக்குப் பின்னர் மற்றக் கட்சிகளைச் சேர்த்துக் கொள்ளும் நிலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வராது.

குஜராத் மாநிலம் பலதுறைகளில் வளர்ச்சி பெறவில்லை, தமிழகத்தைவிட அந்த மாநிலம் பின்தங்கிதான் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே என்று கேட்கிறீர்கள். 2008-ம் ஆண்டிலேயே ராஜீவ் காந்தி ஆராய்ச்சி அறக்கட்டளை வளர்ச்சித் திட்டங்கள் குஜராத்த்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல அமெரிக்க நாடாளுமன்றக் குழு கூட குஜராத் வளர்ச்சித் திட்டங்களை பாராட்டியுள்ளது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நாங்கள் பிரித்தாளும் செயலில் ஈடுபட மாட்டோம். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு சிதறுண்டு போகும் என்று காங்கிரஸார் கூறுகின்றரே என்று கேட்கிறீர்கள்.

குஜராத்தில் 12 ஆண்டுகளாக மோடிதான் முதல்வர். அந்த மாநிலம் சிதறுண்டு போகவில்லை. வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுபோல பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு சிதறுண்டு போகாது என்றார் ராஜ்நாத் சிங்.

Tags:

Leave a Reply