பாஜக.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி தமிழ்நாட்டில் தேர்தல்பிரசாரம் செய்தபோது, 'தினத் தந்தி' ஊடகக் குழுமத்தை சேர்ந்த தந்தி டிவி.யின் 'கேள்விக்கென்ன பதில்?' நேர்காணலுக்கு பேட்டியளித்தார். அதன் ஒருபகுதி:-

கேள்வி: தமிழ்நாட்டில் 2 நாட்கள் தேர்தல்பிரசாரம் செய்தபோது என்ன உணர்ந்தீர்கள்?

மோடி: தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் நான் பிரசாரத்தை தொடங்கிவிட்டேன். இது வரை நாட்டின் மூலை, முடுக்குகளுக்கு எல்லாம் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரசாரம்செய்து வருகிறேன். நாட்டின் எல்லா திசைகளிலும் இந்திய வாக்காளர்களிடையே முதிர்ச்சி ஏற்பட்டுள்ளதை உணர்ந்தேன்.

முன்பெல்லாம், மாநில பிரச்சனை களுக்கும், தேசிய பிரச்சனைகளுக்கும் இடைப்பட்ட நிலையில் மக்கள்மத்தியில் ஒருவித குழப்பம் இருக்கும். அந்த குழப்பமே இல்லாத முதல்தேர்தல் இதுதான். அருணாசல பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சட்ட மன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் சேர்ந்து நடக்கின்றன.

அங்குகூட எந்த தேர்தலில், எப்படி வாக்களிக்கவேண்டும்? என்று மக்கள் பிரித்து பார்க்கிறார்கள். இது தான் இந்த தேர்தலின் தனித்தன்மை. அடுத்தது, பொதுவாக தேர்தல் காலங்களில் ஒரு வித எதிர்மறை எண்ணங்கள் காணப்படும். ஆனால், இந்தமுறை மக்களிடையே இருக்கும் வலிமையான உணர்வு 'நம்பிக்கை' தான்.

ஒருபுதிய அரசு அமையும், நமக்கு நன்மைகள் கிடைக்கும், நாடுமுன்னேற்றம் அடையும் என்று மக்கள் நம்புகிறார்கள். இது நம்பிக்கையை மையப்படுத்திய தேர்தல். அதேசமயம், தற்போதைய அரசுக்கு எதிரான எண்ணம், ஆட்சியாளர்கள் மீதான கோபம் எல்லாம் சேர்ந்து ஒரு சுனாமியாக உருவெடுத்துள்ளது.

இது அலை அல்ல; சுனாமி! ஒரு நம்பிக்கையின் சுனாமி, விருப்பங்களின் சுனாமி, மாற்றத்துக்கான சுனாமி.

கேள்வி: நாடு முழுவதும் அலை வீசுவதாக சொன்னீர்கள், தமிழ்நாட்டிலும் மாற்றம் தெரிகிறதா?

மோடி: தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளிடையே தான் போட்டி நிலவுகிறது. அந்த கட்சிக்கு பிறகு இந்தக்கட்சி, இந்தக் கட்சிக்குப் பிறகு அந்தக் கட்சி என்று மக்கள் விரக்தியில் உள்ளனர். பல ஆண்டுகளாக ஒரு மூன்றாவது அணியை மக்கள் தேடி வருகின்றனர்.

இன்று பா.ஜ.க. தலைமையில் நான்கைந்து பெரும் சக்திகள் ஒரே அணியில் திரண்டுள்ளன. இது தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது, இது மாநிலதேர்தல் அல்ல: மத்திய அரசுக்கான தேர்தல். இதனால், முடிவு எடுப்பதில் எந்த ஆபத்தும் இல்லை.

நாடுவளர்ச்சி அடைந்தால், தமிழ்நாடும் பயன்பெறும். நாட்டில் மின்சார உற்பத்தி பெருகினால், தமிழ்நாட்டுக்கும் அது கிடைக்கும். நதிகளை இணைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டால், பயனடையப் போவது தமிழ்நாடுதான். இதை தமிழக மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

மூன்றாவது, முதல் முறையாக தமிழக தேர்தலில் முக்கியசக்தியாக இளைஞர்கள் இருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல.. சென்ற வருடமே, 'டுவிட்டர்' மற்றும் 'ஃபேஸ்புக்'கில் எனக்கு இருக்கும் அதிகமான ஆதரவாளர்கள் தமிழர்கள் என்பதை பார்த்து ஆச்சரியமடைந்தேன்.

இதுவரை நான்பார்க்காத அன்பை தமிழக மக்கள் எனக்கு அளித்தார்கள். அதனால்தான், எனது சமூக வலைத் தளங்களில் தமிழ் மொழியை பயன்படுத்தக் கூட நான் ஆரம்பித்தேன். தமிழ் மக்கள் எனக்கு அளித்த அன்புக்காக இதை நான்செய்தேன். எனது வலைத்தளங்களில் ஆங்கிலம், இந்தி தவிர நான் இணைத்த முதல் மாநில மொழி, தமிழ் தான் என்று அந்த பேட்டியில் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply