நான் முதலில் இந்தியன். அப்படித்தான் என்னைப் பார்க்க விரும்புகிறேன். அதன்பின், நம்பிக்கையின் அடிப்படையில் இந்து. இதில் பெருமிதம் கொள்கிறேன். என் தேசத்தை நான் நேசிக்கிறேன். எனவே, நீங்கள் என்னை தேசப்பற்று மிக்கவன் என அழைக்கலாம்” என பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:

ஊழல், குற்ற விவகாரங்களை பொருத்தவரை, குறித்த காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டம் ஒன்று என்னிடம் உள்ளது. அதன்படி, வரும் 2019இல் நடைபெற உள்ள 17ஆவது மக்களவை தேர்தலில் குற்றம் மற்றும் ஊழல்சக்திகள் பங்கேற்கவே முடியாது.

இப்போதைய எம்பி.க்களை அந்த செயல்திட்டம் முதலில் குறிவைக்கும். அவர்கள் எந்தக்கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிப்பதற்காக நாடுமுழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் கோரப்படும்.

இதன் மூலம், குற்றமிழைக்காதவர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவதூறுப் பிரசாரத்திலிருந்தும் விடுவிக்கப்படுவது உறுதிப்படுத்தப்படும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களது தகுதி நீக்கத்தால் காலியாகும் இடங்கள் நேர்மையான நபர்களால் நிரப்பப்படும்.

மதச் சார்பின்மை என்ற பதுங்குகுழிக்குள்… மதவெறி, அதிகாரம் மற்றும் பணம் ஆகியவற்றின் அபாயகரமான தொகுப்பாக எனது பிரசாரம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம் சாட்டியுள்ளார். தங்களுக்குத் தோல்விநிச்சயம் என்பதை உணர்ந்துள்ள காங்கிரஸ் தனது இருப்பைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் உள்ளது. இப்போது, மதச்சார்பின்மை என்ற பதுங்குகுழிக்குள் ஒளிந்துகொள்ள காங்கிரஸ் மீண்டும் முயற்சிக்கிறது.

மக்களவைத் தேர்தலில் எப்படியாவது 100 இடங்களைப் பிடித்துவிடலாம் என்பதே அக்கட்சியின் கடைசி நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அதுவும் இப்போது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை சொர்க்கமாக மாற்றுவேன் என்று நான்வாக்குறுதி அளித்ததாக சோனியா விமர்சித்துள்ளார். இந்தியாவைச் சொர்க்கமாக மாற்றுவேன் என்றோ, அனைத்து பிரச்னைகளுக்கும் என்னிடம் தீர்வு உண்டு என்றோ நான் எப்போதும் கூறியதில்லை.

மக்களே இதையெல்லாம் என்னிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். இந்திய மக்கள் “அதிசயம் எதுவும் நடக்கும்’ என்று எதிர்பார்க்க வில்லை. ஆனால் அவர்களுக்கு நிலையான, முடிவெடுக்கும் அதிகாரம்படைத்த அரசை எதிர்பார்க்கும் தகுதி உண்டு.

மக்களவைத் தேர்தலுக்குப் பின், சக்தி வாய்ந்த மாநிலத் தலைவர்களான மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, மாயாவதி ஆகியோரின் ஆதரவைப் பெற முயற்சிப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். இப்போதைக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கே மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் ஏற்கெனவே 25க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் இணைந்து வலுவான, பெரியகூட்டணியை அமைத்துள்ளோம். எனினும், நாட்டை நிர்வகிப்பதற்கு எங்களுக்கு அனைவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது தேர்தல் நேரத்தில் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதற்கான அக்கட்சியின் கடைசிநேர முயற்சியாகும். இதை நிச்சயம் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தே இந்த வாக்குறுதியை காங்கிரஸ் அளிக்கிறது. மதத்தின் அடிப்படையில் வாக்குகளைப் பெறவிரும்பும் அக்கட்சியின் உண்மையான முகத்தை இது வெளிப்படுத்தி விட்டது.

இந்தத் தேர்தலானது வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவற்றில் நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும், வாக்குவங்கி, ஜாதி, மதம் ஆகிய பிளவுபடுத்தும் அரசியலில் நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும் இடையிலான போட்டியாகும்.

நாட்டில் மோடி அலை வீசுகிறதா? காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசுகிறதா? என கேட்கிறீர்கள். இரண்டுமே வீசுவதாக நான் கருதுகிறேன்.

எனக்கு எதிராக ஊழல், திறமையின்மை, உறவினர்களுக்கு சலுகைகாட்டுவது போன்ற குற்றச்சாட்டுகளை அரசியல் எதிரிகளால் சுமத்த முடியவில்லை.

எங்களது ஆட்சியில் ஹிந்துக்களோ முஸ்லிம்களோ, யாரும் பாதுகாப்பற்ற உணர்வோடு இருப்பதற்கு எந்த காரணமும் இருக்காது. யாராவது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருதினால் அதற்கு முஸ்லிம்களை வெறும்வாக்கு வங்கியாக நினைத்துச் செயல்பட்ட கட்சிகள்தான் காரணம்.

அனைத்து ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்பட 125 கோடி இந்தியர்களின் பாதுகாப்புக்கும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

என்னை முதலில் ஓர் இந்தியனாகவே பார்க்கவிரும்புகிறேன். அனைத்துக்கும் மேலாக, மத நம்பிக்கையின்படி நான் ஒருஹிந்து. நான் இந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதற்காக பெருமைப்படுகிறேன். எனது நாட்டை நேசிக்கிறேன். எனவே, என்னை ஒருதேசபக்தன் என்று நீங்கள் குறிப்பிடலாம்.

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதியை கடுமையாக விமர்சித்தபோது, “இது கடைசி நேர முயற்சி. முழுக்க முழுக்க வாக்கு வங்கி அரசியல் இது. மதசார்பின்மை என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது என்றே சொல்வேன்”

சுதந்திர இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் சர்தார் வல்லபபாய் படேல்தான். நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் என்றமுறையில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்ததன் மூலம் அவர் மிகப்பெரிய பணியாற்றியுள்ளார் என்று மோடி கூறினார்.

Leave a Reply