மது விலக்கு கோரி காந்திய மக்கள்கட்சி சார்பில் நடைபெறும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பொன். ராதாகிருஷ்ணன், வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

மதுரையில் வியாழக் கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடு நிலையோடு செயல்படவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்று இரட்டை அளவுகோலை பயன் படுத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் எங்குமே இல்லா வகையில் 144 தடை உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம், பண பட்டுவாடாவை தடுப்பதற்குப் பதில் அதற்கு துணை போயிருக்கிறது.

பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டு வருவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், எங்களது காந்திய மக்கள்கட்சி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளது.

இதில் பாஜக. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தேமுதிக.வை அழைக்கவில்லை. காரணம், அவர்கள் மது விலக்கு தொடர்பாக தங்கள் கருத்தை இன்னமும் தெளிவுபடுத்தவில்லை. பிரேமலதா ஓரிரு கூட்டங்களில் பேசியதைமட்டும் வைத்துக்கொண்டு அக்கட்சி மதுவிலக்குக்கு ஆதரவான கட்சி என்று முடிவுக்கு வரமுடியாது என்றார்.

Tags:

Leave a Reply