சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கவுரவம் பாராமல் தேசிய புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக அரசு சம்மதிக்கவேண்டும்” என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் அவர் மேலும் கூறியதாவது : சென்னையில் கவுகாத்தி ரயிலில் வியாழக்கிழமை வெடித்த வெடி குண்டுகள், ஆந்திரத்தில் திருப்பதி மற்றும் காளஹஸ்தி பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்த மோடியை குறிவைத்தோ அல்லது அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒரு பதற்றத்தை உருவாக்க வைக்கப்பட்ட வெடி குண்டுகள் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அந்த ரயில் சென்னையை கடந்து கவுகாத்திநோக்கி செல்லும்போது சென்னைக்கு அடுத்ததாக உள்ள ரயில் நிலையம் திருப்பதிக்கு மிக அருகாமையில் உள்ள ரயில் நிலையமாகும். அங்கு அதை வெடிக்கச்செய்ய வேண்டும் என புறப்பட்டவர்களுக்கு ரயில் காலதாமதம் ஆனதால் சென்னையில் வெடித்துள்ளதாக கருதுகிறோம்.

தமிழக அரசு இந்தவிஷயத்தை கவுரவ பிரச்சினையாக பார்க்காமல், குண்டுவெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு குழுவிடம் ஒப்படைப்பது தான் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க உதவும் என கருதுகிறேன். தமிழக டி.ஜி.பி ராமானுஜம், தமிழகத்தை குறிவைத்து குண்டு வைக்கவில்லை என்று சொல்லியுள்ளார். எனவே, இருமாநிலங்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு குழு விசாரிப்பது பொருத்தமாக இருக்கும். மேலும், தமிழக சிபிசிஐடி பிரிவைக்காட்டிலும், தேசிய புலனாய்வுக் குழுவுக்கு போதுமான பயிற்சி, ஆட்கள், உபகரணங்கள் இருப்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.. என்று அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply