பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது; +2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எனது பாராட்டையும், வாழ்த்தையும்

தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட 2.3சதவிகிதம் பேர் அதிகம் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டைப் போலவே மாணவர்களை விட மாணவிகளே 6 சதவீகிதம் பேர் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது அடுத்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு பெரும் சவால்தான்.

அரசுப்பள்ளிகளில் குறிப்பாகக் கிராமத்து மாணவ மாணவிகள் தங்களது மகத்தான கல்வி ஆற்றலை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். அப்பெருமையும், பெருமிதமும் அந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல. அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களையும் சாரும் என்பதில் ஐயமில்லை. அவர்களது படிப்புக்கு தேவையான வசதிகளை அறிந்து மேலும் பல உதவிகளை அவர்களுக்கு செய்தளித்தால் அவர்கள் இன்னும் சிறப்பாக தங்களது திறமையில் முத்திரைப்பதிப்பார்கள் என்பது நிச்சயம்.

வெற்றி பெற்ற மாணவர்களின் உயர்படிப்புகளுக்கு உரிய அனைத்து உதவிகளையும், சலுகைகளையும், அரசு அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெற வேண்டிய ஆவணங்களையும் மிகக் குறுகிய காலத்தில், எளிதாகக் கிடைக்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்வி நிலையங்களில் சேர்க்கை மற்றும் பயிலும் காலங்களில் மாணவர்களுக்கு எந்த நிலையிலும் எள்ளளவும் இடையூறுகள் ஏற்படாத வகையில் கல்வித்துறை கண்காணிப்பது மிகவும் அவசியம்.

தேர்வில் தோல்வி என்பது அடுத்த வெற்றிக்கான படிக்கட்டு தானே தவிர வேறல்ல. எனவே தோல்வியுற்ற மாணவ மாணவிகள் கவலைப்படுவதற்கோ கலக்கமடைவதற்கோ ஏதுமில்லை.உலகளாவிய அளவில் புகழ்பெற்ற மா மேதைகள் கூட இப்படிப்பட்ட கல்வித் தேர்வுகளில் தோற்ற வரலாறுகள் உண்டு. அவர்களெல்லாம் பிற்காலத்தில் தங்களது அறிவால், ஆற்றலால் சாதித்து சரித்திரத்திலேயே இடம் பெற்றிருக்கிறார்கள்.

எனவே பெற்றோரும் தங்களது தோல்வி கண்ட பிள்ளைகளுக்கு ஆறுதலாகவும், அணுசரனையாகவும் இருந்து அடுத்த வெற்றிக்கு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.தேர்வில் தோல்வி என்பதனாலேயே நிகழும் சில துயரங்கள் கண்டிப்பாக தொடரக்கூடாது என்ற உறுதியோடு அனைவரும் செயல்பட வேண்டும் என்று பெரிதும் கேட்டுக்கொள்கிறேன்.

விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் தேர்வில் முன்னிலையிலும், திருவண்ணாமலை மாவட்டம் மிகவும் பின்தங்கியும் உள்ளன.
கல்வித்துறை இதை கவனத்தில் கொண்டு எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி பின் தங்கியுள்ள மாவட்டங்களில் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags:

Leave a Reply