ஜல்லிக் கட்டுக்குத் தடை விதித்திருப்பது என்பது, பாரத பாரம் பரியத்தை அழிக்கும் பன்னாட்டுசதியின் ஒரு பகுதிதான் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராமகோபாலன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பிராணி வதைத்தடுப்புச் சங்கம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஜல்லிக்கட்டு நடத்தத்தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பிராணி வதைத்தடுப்புச் சங்கம் வாதிட்டது ஒருநாடகம் என்பது உண்மை!

நமது நாட்டின் பாரம்பரியத்தை சிதைக்க பன்னாட்டு என்ஜிஓ. அமைப்பினர் பல வழிகளை கையாண்டு வருகிறார்கள். உதாரணமாக பட்டாசுக்கு எதிரானபிரச்சாரம், வழக்கு முதலானவைகளை எடுத்துக் கொள்ளலாம். முதலில் குழந்தைத் தொழிலாளர்கள் என்றும், ஒலி, காற்றுமாசு என்றும், அதன்பிறகு பட்டாசுக்கு செலவிடும் காசை நல்ல செயலுக்கு பயன்படுத்தலாமே என்று பசப்புகிறார்கள். இவர்களுக்கு சில அறிவுஜீவிகளும் ஒத்து ஊதினர். வறட்சி மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரமாகவும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பரவசப்படுத்திடும் ஒரு நாள் கொண்டாடப்படும் தீபாவளியை சீர்குலைக்கவும் இந்த சதி என்பதை இந்துமுன்னணி தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது.

அதுபோல, ஜல்லிக்கட்டு என்பது நமது நாட்டின் பெருமை மிகு காளைகளை பாதுகாத்து வருகிறது. இளைஞர்களிடம் வீரத்தை ஏற்படுத்தி வருகிறது. சிலரின் தவறான வழி முறையால் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்பதை தடுக்க முறைப்படுத்துவதை விடுத்து ஜல்லிக் கட்டை தடுப்பது சரியான செயலா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும். ஜல்லிக்கட்டு என்பது திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு வருடத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நடத்தப்படுகிறது. குதிரைபந்தயமோ மாதந்தோறும் நடத்தப்படுகிறது. அதிலும் குதிரைகள் துன்புறுத்தப்படுகிறது. ஆனால் அதை தடை செய்ய ஏன் வலியுறுத்தவில்லை. அது சூதாட்டம்! மிருகவதை! ஏன் அதைத் தடுக்க பிராணி வதைத் தடுப்புச் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை?!

தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் புளிமூட்டைப் போல காளைகளையும், பசுக்களையும் கன்றுக்களையும் உயிரோடு கொன்று கசாப்பிற்கு எடுத்துச்செல்லும் கொடுமையை எதிர்த்து பிராணிவதைத் தடுப்புச் சங்கம் வழக்குத் தொடுத்துள்ளதா? அதை ஏன் முழுமையாகத் தடுக்க முற்படவில்லை? இவர்களது நோக்கம் பிராணிவதையா அல்லது பாரம்பரியத்தை அழிப்பதா?

அதுமட்டுமல்ல ஜல்லிக்கட்டிற்காக வளர்க்கப்படும் நமது நாட்டின் காளைகள் கசாப்பிற்கு விற்கப்பட்டு அழிக்கப்படவே இந்த தடை உதவும். இதன்மூலம் நாட்டுமாடுகள் இல்லாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயத்தை உணரவேண்டும். நமது நாட்டில் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், பாரம்பரிய இடங்கள் எல்லாம் நமது வழிபாடு, விழாக்கள், பண்டிகைகள், நம்பிக்கைகள் முதலாவற்றோடு பிணைத்திருப்பதால் காக்கப்படுகின்றன.

இவ்விஷயத்தில் மாநில அரசு மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக பராம்பரியத்திற்கும் மதிப்பளித்து ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையைவிலக்கவும், தகுந்த விதி முறைகளை வகுத்து முறையாக திரு விழாக்கள் நடைபெறவும், ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்திடவும் வழிகாண வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது. என்று அவர் கூறியுள்ளார்.

One response to “ஜல்லிக் கட்டுக்குத் தடை விதித்திருப்பது பாரத பாரம் பரியத்தை அழிக்கும் பன்னாட்டு சதி”

  1. C.Sugumar says:

    முற்றிலும் தவறானது.ஜல்லிக் கட்டு என்பது ஒரு முட்டாள்தனமான ஆட்டம். பந்து பல்லாங்குழி என்று எந்த விளையாட்டுக்கும் ஒரு இலக்கணம் உண்டு. ஆனால் இலக்கணம் இல்லாத ஒரு வெறியாட்டத்தை விளையாட்டு என்று சொல்வது பேதைமை. இது போன்றவற்றை பண்பாடு என்று கருதினால் இந்துக்கள் உருப்பட முடியாது.தகுதியற்ற காாியங்களில் தங்களில் ஆற்றல் பணம் மனித வளத்தை வீணாக்கி வாழும் ஒரு சமூகமாக இந்துக்கள் தொடரு அனுமதிப்பது முட்டாள்தனமானது.பிறாமணா்கள் ஜல்லிக் கட்டு விளையாடுவதில்லை. அவன் உயா்ந்த நிலையில் இருக்கின்றான்.

Leave a Reply