நரேந்திர மோடி பிரதமராக பதவியில் அமர உள்ள நிலையில் வேளையில், இந்தியாவால் தேடப்பட்டுவரும் நம்பர் ஒன் டான் தாவூத் இப்ராகிம், தனது கூட்டாளிகளோடு பாகிஸ்தானைவிட்டு தனது இருப்பிடத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களை பிடித்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளர் மோடி 24ம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார் . இந்நிலையில், தீவிரவாதத்தை களையெடுப்பதாக தேர்தல்பிரச்சாரத்தில் மோடி வாக்குறுதி கொடுத்துள்ளார் என்பதால் தாவூத் இப்ராகிம் உள்ளிட்டோர் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது .

எனவே, தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளிகளோடு தனது மறைவிடத்தை வேறுபாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளாராம்.

விரைவில் புலனாய்வு துறையை முடுக்கி தாவூத்தை கைதுசெய்யும் பணிகளில் மோடி இறங்கிவிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது பாதுகாப்பை அதிகரித்து கொள்ளும்வகையில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தாலிபன்களின் ஆதிக்கம் உள்ள பகுதியில் தனது மறை விடத்தை மாற்ற முடிவு செய்துள்ளாராம்

சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, ‘தங்களது அரசு ஒருபோதும் தீவிரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது’ எனக் கூறியிருந்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சுஷில்குமார் ஷிண்டே, தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்குக் கொண்டுவர முயற்சிகள் நடப்பதாகவும், இது தொடர்பாக அமெரிக்காவின் எப்பிஐயுடன் தொடர்பு கொண்டிருப்பதாகும் கூறிவந்தார். ஆனால் அப்போது உள்துறை செயலாளராக இருந்தவரும், தற்போது பாஜகவில் இணைந்துள்ளவருமான ஆர்.கே.சிங் அதை மறுத்துள்ளார். அப்படியெல்லாம் ஷிண்டே எதையம் செய்ய வில்லை என்று அவர் கூறியுள்ளார்.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் மிகத் திறமையாக ஈடுபட்டவரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒய்.சி. பவார், தாவூத் இப்ராகிமை இந்தியாவால் நிச்சயம் நாடு கடத்திக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மோடி மிகவும் திறமையானவர், ‘வில் பவர்’ கொண்டவர். நினைத்ததை சாதிக்கக் கூடியவர். அப்படிப்பட்ட ஒரு திறமையாளர்தான் உயர்மட்டத்தில் இருக்க வேண்டும். எனவே மோடியால் நிச்சயம் தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானை விட்டு தூக்கிவர முடியும். இதை நான் தற்போது பாஜக உறுப்பினராக இருந்து சொல்லவில்லை. ஒரு காவல் துறை அதிகாரியாகவும்,நான் மோடி மீது நம்பிக்கை வைத்து சொல்கிறேன். இது ஒன்றும் மோடிக்கு கஷ்டமானகாரியம் அல்ல. ‘வில் பவர்’தான் இங்கு முக்கியம். அது மோடியிடம் உள்ளது என்றார்.

Leave a Reply