“மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைக்கிறது. ஆதலால், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டவேண்டும்’ என்று பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை குஜராத் சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலா கேட்டுக் கொண்டுள்ளார்.

அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.,வை காங்கிரஸ் கட்சி விமர்சித்துவரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவரே இவ்வாறு பேசியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தை கதிகலக்கியுள்ளது.

குஜராத் சட்டப் பேரவையில் நரேந்திர மோடிக்கு பிரியா விடை கொடுப்பதற்காக, புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் வகேலா பேசியதாவது:

ராமர்கோவில் விவகாரத்தை முன்னிறுத்தி, எல்.கே. அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டதால், பா.ஜ.க.,வுக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்தன. ஆனால், பாஜக தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சமரசம் செய்வதற்காக ராமர்கோவில் விவகாரத்தை கைவிட வேண்டியதிருந்தது.

தற்போது, தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பலம்பெற்று மத்தியில் ஆட்சியமைக்கிறது. எனவே அரசியலமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு அயோத்தியில் ராமர்கோவிலை மோடி கட்டவேண்டும்.

குஜராத்தில் இருந்து பிரதமரான இருவரது வாழ்விலும், கோத்ராபகுதிக்கு முக்கிய பங்குள்ளது. கோத்ராவில் துணை ஆட்சியராக மொரார்ஜி தேசாய் இருந்த போது, 1969ஆம் ஆண்டு கலவரம்மூண்டது. இதனை சரிவர கையாளவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு, அரசியலுக்கு மொரார்ஜிதேசாய் வந்தார். பின்னர் அவர், நாட்டின் பிரதமரானார்.

அதுபோல் நீங்கள் (மோடி) கோத்ரா மற்றும் வதோதராவில் ஆர்எஸ்எஸ். பிரசாரகராக இருந்தீர்கள். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்துக்குள் நான் செல்லவிரும்பவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும், விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தீர்கள்.

பதவிக்குவந்த 6 மாதங்களில் விலை வாசியை 25 சதவீதம் வரை குறைப்பேன் என தெரிவித்தீர்கள். இதுகுறித்து பதவியேற்று ஒரு ஆண்டு வரை எந்த கேள்வியும் கேட்கமாட்டோம். ஆனால் ஓராண்டுக்கு பிறகு விலைவாசி குறித்து கேள்விகேட்போம்.

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்புபணத்தை மீட்க யோகா குரு ராம்தேவ் தலைமையில் குழு அமைக்க வேண்டும். ஐ.மு.,கூட்டணியின் ஆட்சியில் மத்திய அரசுக்கும், குஜராத்துக்கும் இருந்து வந்த பிரச்னைகளுக்கு உங்கள் ஆட்சியில் தீர்வு காணப்படவேண்டும்’ என்று வகேலா தெரிவித்தார்.

Leave a Reply