பாஜக மாநில அளவில் வலுப்படுத்துவது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில், பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், வருண்காந்தி உட்பட 10 பொதுச் செயலாளர்கள் பங்கேற்றனர். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, அரசை மேம்படுத்துவது மற்றும் கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை மோடி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கட்சியின் பொதுசெயலாளர்கள் அனைவரும் அரசுக்கும், பொது மக்களுக்கும் இடையிலான பாலமாக செயல்படவேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் ஜார்க்கண்ட், பீஹார் மற்றும் ஜம்முகாஷ்மீரிலும், கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் பொதுச் செயலாளர்களுக்கு மோடி அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களிலும் கட்சியை தயார்ப்படுத்தும்படி மோடி தெரிவித்ததாக கூறபப்டுகிறது. கடந்த 26ம்தேதி பிரதமராக பதவியேற்ற பின்னர், முதன் முறையாக கட்சியின் பொதுச்செயலாளர்களை அழைத்து மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக்கூட்டத்தில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங், ராம் லால், அமித் ஷா, அனந்த் குமார், முரளிதர் ராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags:

Leave a Reply