இரங்கல் செய்தி மத்திய கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கோபிநாத் முண்டே புதுடெல்லியில் ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்தார் என்ற பேரதிர்ச்சித் தரும் செய்தி அறிந்து நெஞ்சம் பதறினேன்.63 வயதான அவர் தனது சிறுவயது முதலே பொது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர்.

கல்லூரிப் பருவத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கத்தில் இணைந்து தேசத் தொண்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். உயரிய தொண்டுணர்வாலும், கடும் உழைப்பாலும் பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களுள் ஒருவராக உயர்ந்து பெருமைப் பெற்றவர்.மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும், துணை முதலமைச்சராகவும் அரசியலில் வளர்ச்சி கண்டு அதன் மூலம் மாநிலத்திற்கு அளப்பரிய சேவைகள் புரிந்தவர்.

கடந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக திறம்பட பணியாற்றியவர். தற்போது இரண்டாவது முறையாக மக்களவை தேர்தலில் வெற்றியடைந்த அவரது ஆற்றலுக்கும், நிர்வாகத்திறனுக்கும் உரிய வாய்ப்பாக மாண்புமிகு மோடி அவர்களால் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது அகால மரணம் அவரது குடும்பத்திற்கும், பா.ஜ.க.வுக்கும் மட்டுமல்ல இந்த நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.அவரை இழந்து தாளாத துக்கத்தில் வாடும் அவரது குடும்பத்தின் பெரும் துயரில் தமிழ்நாடு பா.ஜ.க. பங்கேற்கிறது.

அவரது மறைவினால் துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் பா.ஜ.க. கொடிகள் அரைக்கம்பத்தில் 3 நாட்களுக்கு பறக்க விடப்பட வேண்டும்; என்றும் மேலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் நடத்த வேண்டுமென்றும் பா.ஜ.க நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன். என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

Leave a Reply