கங்கை நதியை தூய்மைப் படுத்தி அதனை புனித சுற்றுலாமையமாக உருவாக்கும் பணியை மத்திய அரசின் 4 அமைச்சகங்களிடம் பிரதமர் நரேந்திரமோடி ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தரை வழி போக்குவரத்து, கப்பல், சுற்றுலா மற்றும் நீர்வளத் துறை ஆகிய அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கங்கை நதியை தூய்மைப் படுத்தும் பணியை முன் மாதிரியாக வைத்து நாட்டிலுள்ள பிறநதிகளும் தூய்மைப்படுத்தப்படும்.பிரதமர் வாக்குறுதி அளித்ததை போல கங்கை நதியை சுத்தப் படுத்துவதே பாஜக அரசின் தலையாயப் பணி என்றார் உமாபாரதி.

தரைவழி போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “கங்கையை தூய்மைப்படுத்தும் பணியை செயல் படுத்துவதற்காக 4 அமைச்சகங்களின் செயலாளர்கள் கொண்டகமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி வரை கங்கை நதியில் மேற்கொள்ளப்படும் தூர் வாரும் பணியினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கான்பூர், அலாகாபாத் பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் மறு சுழற்சிக்குப் பிறகே நதியில் கலக்க செய்யப்படும். நதியின் குறுக்கில் 100 கிமீ. இடைவெளியில் ஒரு தடுப்பு அணையை அமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது’ என்றார்.

Leave a Reply