புனித நதி கங்கையை சுத்தப்படுத்துவோம் என, தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது, அடுத்த சில நாட்களிலேயே செயல் வடிவம் பெறத் துவங்கியுள்ளது. மத்திய நீர்வளத்துறை, சாலை போக்குவரத்து துறை, கப்பல் போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலா துறைகள் இணைந்து, நேற்று இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுத்து உள்ளன.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மோடி, நாட்டின் நதிகளை சுத்தப்படுத்துவோம்; அதற்கான ஏற்பாடுகளை முழு மனதுடன் மேற்கொள்வோம்; குறிப்பாக, கங்கை நதியை சுத்தப்படுத்துவோம் என, அறிவித்திருந்தார். ஓட்டு எண்ணிக்கையில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதும், வாரணாசி சென்று, கங்கை நதிக்கரையில் நீண்ட நேரம் பூஜைகள் மேற்கொண்டார். தேர்தலுக்குப் பிறகு மத்தியில் அவர் தலைமையில் ஆட்சி அமைந்ததும், நாட்டின் அனைத்து நதிகளையும் பராமரித்து, சுத்தப்படுத்துவதற்காக, தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினார். உமா பாரதி தலைமையில், நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை சுத்தப்படுத்துதல் துறை அமைக்கப்பட்டது. முந்தைய அரசுகளில், நீர்வளத்துறை என்ற துறை இருந்துள்ள நிலையில், கங்கையை சுத்தப்படுத்துவது என்ற பெயரில், தனி துறை இருந்தது இல்லை. அதுவும் அந்த துறையை, பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான உமா பாரதியிடம் அளித்தது, மோடியின் சிறப்பான கணிப்பு என, அரசியல் நோக்கர்கள் அப்போது தெரிவித்தனர்.

கங்கை நதி மீது கொண்ட பற்றால், வதோதரா, வாரணாசி என இரண்டு லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த மோடி, வதோதராவை கைவிட்டு, வாரணாசியை கைபிடித்தார். அதற்காக அவர் விடுத்த செய்தியில், கங்கை மாதாவுக்கு சேவை செய்யும் பாக்கியத்திற்காகவும், மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணிக்காகவும், வாரணாசி தொகுதியின் எம்.பி.,யாக தொடர்கிறேன் என கூறியிருந்தார். அவரின் விருப்பப்படி, கங்கையை சுத்தப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நேற்று துவங்கின. அந்தப் பணிகளை எப்படி துவக்குவது, என்னென்ன பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்வது என்பதை முடிவு செய்வதற்காக, நான்கு துறை அமைச்சர்கள் கூடி விவாதித்தனர். முடிவில், கமிட்டியை உடனே ஏற்படுத்தி, கங்கையை சுத்தப்படுத்தும் பணியை துவக்குவது என, முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், மத்திய சாலை போக்குவரத்து, கப்பல் துறை அமைச்சர், நிதின் கட்காரி, கங்கையை சுத்தப்படுத்தும் துறை அமைச்சர் உமா பாரதி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கங்கை – சில தகவல்
* நதியின் நீளம் – 2,525 கி.மீ.,
* நதியோரம் வாழும் மக்கள் – 50 கோடி
* ஆண்டுக்கு, 40 ஆயிரம் பிணங்கள் எரிப்பு
* ஆண்டுக்கு, 15 ஆயிரம் டன் சாம்பல் நதியில் கலப்பு
* 200 டன், அரைகுறையாக எரிந்த மனித உடல்கள் வீசப்படுகின்றன
* 1,800 டால்பின் மீன்கள் வசிக்கின்றன
* சுத்தப்படுத்த உத்தேச செலவு – 2 லட்சம் கோடி ரூபாய்

கங்கையில் கலக்கும் பிற நதிகள்: யமுனா, ராமகங்கா, கோமதி, காகாரா, கான்டாக், தாமோதர், கோசி, காளி, சம்பல், பெட்வா, கென், டோன்ஸ், சோனே.

கங்கை நதிக்கரை தொழில் நகரங்கள்
* ஹரித்துவார்
* கான்பூர்
* அலகாபாத்
* வாரணாசி

எப்படி மேற்கொள்ளப்படும்?

@@* முதற்கட்டமாக, நான்கு துறை செயலர்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு, இந்த திட்டத்திற்கான செயல்வடிவத்தை, ஒரு மாதத்தில் வடிவமைக்கும்.
* அனைத்து துறையினரும் இப்பணியில் முழுமூச்சில் ஈடுபட்டு, அந்தந்த துறை செயல்பாடு, எதிர்கால திட்டம், செலவு போன்றவற்றை முடிவு செய்வர்.
* கங்கை நதி பாயும், உ.பி., வாரணாசி நகரிலிருந்து, மேற்கு வங்கம், ஹூக்ளி நகரம் வரை, 45 மீட்டர் ஆழப்படுத்தப்படும். இதற்காக ஏராளமானோர் பணியமர்த்தப்படுவர்; வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
* கங்கை நதியை ஆழப்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் விவகாரங்களை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆராய்ந்து, தகுந்த முடிவெடுக்கும்.
* நதி ஓட்டத்தில் ஒவ்வொரு, 100 கி.மீ.,க்கும் தடுப்பணைகள் கட்டப்படும். அதில், சரக்குகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ளப்படும்.
* இந்தப் பணிகளுக்காக, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அமைக்கப்படும்; இதை, மத்திய மனித வள மேம்பாட்டு துறை மேற்கொள்ளும்.
* கான்பூர் மற்றும் அலகாபாத் நகர தொழிற்சாலைகளில் இருந்து கங்கை நதியில் கலக்கும் கழிவு நீர், மறுசுழற்சி செய்யப்பட்டு, மறுபடியும், அந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும்.
* இந்தப் பணியில், கங்கையின் புனிதம், பாரம்பரியம் பாதுகாக்கப்படும்.
* இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
* எவ்வளவு விரைவாக பணிகளை துவக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக துவக்கப்படும்.

இந்தியாவின் புனித நதி: @@கங்கை நீரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் ஏராளம். கங்கையில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய நான்கு வழிபாட்டு தலங்களும், கங்கையை அடிப்படையாக கொண்டவை. ஆண்டுதோறும், 2 கோடி இந்துக்கள் இந்த நான்குவழிபாட்டு தலங்களிலும் வழிபடுகின்றனர்.

முதற்கட்டமாக, கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியை துவக்கி, வெற்றிகரமாக நிறைவு செய்வோம். அதற்காக, பிற நதிகளை புறக்கணிக்கப் போவதில்லை. கங்கை நதியை சுத்தப்படுத்தியதும், அதே மாதிரி, பிற நதிகளை சுத்தப்படுத்துவோம்.
உமா பாரதி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர்

இந்த திட்டம் குறித்து நான்கு துறை செயலர்களும் கூடி, விரிவான செயல் திட்டத்தை தயாரிப்பர். அந்த அறிக்கை, இன்னும் ஒரு மாதத்திற்குள் தயாராகிவிடும். அதன் பிறகு, அனைத்து துறை ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஒப்புதலுக்கு பிறகு, அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். நிதின் கட்காரி, சாலை போக்குவரத்து துறை அமைச்சர்

கங்கை மாதா தான் என்னை இங்கே அழைத்து வந்துள்ளார். அவளுக்கு தொண்டாற்ற இந்த மைந்தன் தான் சரிப்பட்டு வருவான் என நினைத்து, என்னை அவள் இங்கே வரச் செய்துள்ளாள். அந்த தாயின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். மாசடைந்துள்ள கங்கை நதியை சீர்படுத்துவேன்; இது தான் என் வாழ்வின் லட்சியம்.
மோடி பிரதமர், (தேர்தல் பிரசாரத்தின்போது)

நன்றி;தினமலர்

Leave a Reply