ஜனாதிபதி உரையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். இந்தியாவின் உண்மை சக்தியை உலகிற்கு காட்டுவோம் என்று , பிரதமர் நரேந்திரமோடி, லோக்சபாவில் இன்று தனது முதல் பேச்சில் சூளுரைத்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த திங்கள் கிழமை உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பா.ஜ.க, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பிக்களும் பேசினர்.

இதனை தொடர்ந்து , தீர்மானத்தின் மீதான பேச்சுக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது: தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்தியாவின் சக்தியை உலகத்திற்கு காண்பிக்க வேண்டியதருணம் வந்துள்ளது. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரின் கடமையாகும். அரசு ஒரு குறிப்பிட்ட வர்களுக்காக இயங்காது. இது ஏழைமக்களுக்கான அரசு. நாம் ஏழைமக்களை பற்றி கவலைப்படா விட்டால் இந்த நாட்டுமக்கள் நம்மை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

ஏழ்மையை ஒழிக்க இருக்கும் மிகப் பெரிய ஆயுதம் கல்வியறிவு தான். இந்நாட்டு விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் உருப்படியாக ஏதாவது செய்துள்ளோம் என்று நேர்மையாக நம்மால் கூறமுடியுமா? கிராமங்களில் 24 மணிநேர மின்சாரம், இணையதள வசதி, நல்லகல்வி கிடைத்தால் நாட்டின் வளர்ச்சிக்கு கிராமங்களால் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கமுடியும்.

நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு அளிப்பது தான் அரசின் குறிக்கோள். கிராமங்களில் பணியாற்ற ஆசிரியர்கள் விரும்பா விட்டால், செயற்கைக் கோள் மூலமாக கிராம மாணவர்களுக்கு பாடம் கற்பிப்போம். ஏழைகள் மீண்டும்பசியால் வாடி விடாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். உணவுபொருட்கள் வினியோகத்தில் பெரும் சிக்கல் உள்ளது.

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவேண்டும். விலை வாசியை குறைக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் நம்மை நாமே கேள்விகேட்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. பலாத்காரங்களை உளவியல் ரீதியாக ஆய்வுசெய்ய வேண்டாம் என்று அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன். பலாத்காரத்தை வைத்து அரசியல்செய்வதை நாம் நிறுத்தவேண்டும்.

பெண்களின் மாண்புடன் நாம் விளையாடக்கூடாது. பெண்களை மதிப்பதும், அவர்களை பாதுகாப்பதுமே இந்த அரசின் முக்கிய குறிக்கோள். இளைஞர்களின் திறமைகள் வளர்ச்சி பெற வேண்டும். ஊழல் இந்தியாவை முன்னிறுத்தாமல் இனிவருங் காலங்களில் திறமை மிக்க இந்தியா முன்னிறுத்தப்பட வேண்டும். பலமற்ற சமூகத்தினரால் சுயசார்பை பெற முடியாது.

இஸ்லாமிய சகோதரர்கள் இந்நாட்டில் பிற்படுத்தப்பட்ட நிலையில், வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை முன்னேற்ற நாம் கவனம்செலுத்த வேண்டும். இஸ்லாமியர்களை விட்டு விட்டு நாட்டின் வளர்ச்சியை நினைத்து பார்க்க முடியாது. மக்கள் இயக்கத்தால் நாட்டுக்கு மகாத்மா காந்தி சுதந்திரம் பெற்றுத்தந்ததை போல மக்களுக்கான வளர்ச்சியை நாம் பெற்றுத்தர வேண்டும்.

காந்தியின் 150வது பிறந்ததின ஆண்டில் சுத்தமான, நேர்மையான இந்தியாவை அவருக்கு பரிசாக அளிப்போம் வாருங்கள். 2022ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களும் வீடு, கழிப்பிடம், மின்சாரம், குடிநீர் வசதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணிக்கையை வைத்து பாண்டவர், கவுரவர் என காங்கிரஸ் நண்பர்கள் பிரித்து பார்க்க வேண்டாம்.

உங்களை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சி இருக்காது. மாநிலங்கள் இடையே வளர்ச்சி குறித்த ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். குஜராத் மாடல் நிர்வாகம் சிறந்தது என்று நான் கூறிய நிலையில், தமிழ்நாடு மாடல் தான் சிறந்த நிர்வாகம் என்ற கூறுவதையும் நான் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு மாநிலங்களும் சில தனித் துவங்களை பெற்றுள்ளன. சில திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகின்றன. தமிழகத்தின் நகர்ப் புறங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. மாநிலங்கள் மீது அதிகாரம் செலுத்தும் பெரியஅண்ணன் தோரணையில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply