பிரதமராக பதவி ஏற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக, நரேந்திரமோடி நேற்று பூடான் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் மன்னரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

பூடான் மன்னர் ஜிக்மே வாங்சுக், பிரதமர் ஷெரிங் தோப்கய் ஆகியோர் தங்கள் நாட்டுக்குவருமாறு அழைப்பு விடுத்து இருந்தனர்.

அந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திரமோடி நேற்று தனிவிமானம் மூலம் பூடான் சென்றார். இது, அவர் பிரதமராக பதவி ஏற்றபின் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் ஆகும்.

பிரதமருடன், வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரும் சென்றனர்.

தலைநகர் திம்பு அருகே உள்ள பரோவிமான நிலையத்தில் பிரதமர் மோடி இறங்கியபோது அவருக்கு அரசு மரியாதையுடன் சிவப்புகம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கய் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர்.

மேலும் விமான நிலையத்தில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள திம்புநகருக்கு மோடியை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச்செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

எனினும், காரிலேயே திம்புவுக்கு பயணம் செய்வதற்கு மோடி விருப்பம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் கார்மூலம் திம்புவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது வழிநெடுகவும், மலையின் வளைவுகள் தோறும் நரேந்திரமோடி, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கய் ஆகியோரின் பிரமாண்ட ‘கட்-அவுட்’டுகள் வைக்கப்பட்டு இருந்தன. வண்ணக் கொடிகளும், தோரணங்களும் தொங்கவிடப்பட்டு இருந்தன.

பூடான் நாட்டு பாரம்பரிய சீருடை அணிந்த பள்ளிக் குழந்தைகள் இந்தியதேசிய கொடிகளை கைகளில் பிடித்து அசைத்தவாறு மோடியை உற்சாகமாய் வரவேற்றனர். இதேபோல் நூற்றுக் கணக்கான பொதுமக்களும் சாலையோரம் திரண்டு நின்று மோடியை வரவேற்றனர்.

பின்னர் திம்புவில் பூடான் மன்னர் வாங்சுக்கை சந்திப்பதற்காக அவரது அரண்மனைக்கு மோடி சென்றார். அங்கு அந்தநாட்டின் பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடி அரண்மனைக்கு செல்லும் முன்பாக பலத்தமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் திறந்த வெளியில் அவருக்கு அரசின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுமா? என்பது சந்தேகமாக இருந்தது. எனினும், சிறிதுநேரத்தில் மழை நின்றுcவிட்டது. இதனால் திட்டமிட்டபடி மோடிக்கு சிறப்பான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது இருநாடுகளின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

அதன் பிறகு, மன்னர் வாங்சுக்கை மோடி சந்தித்து பேசினார். அப்போது மன்னரின் மனைவி ஜெட்சன் பெமாவும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

தலைவர்களின் இந்த பேச்சுவார்த்தை சிறந்தமுறையில் அமைந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பிற்கு பிறகு இருதலைவர்களும் கைகுலுக்கியவாறு ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் இரு தலைவர்களும், வாங்சூக்கின் மனைவி ஜெட்சன் பெமா, இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோருடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

மன்னரை சந்தித் தபின்பு, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கயை மோடி சந்தித்துபேசினார். அப்போது இந்த சந்திப்பை, இரு நாடுகளின் உறவை நட்புரீதியாக கொண்டாடும் வகையில், மேலும் வலுப்படுத்துவதற்குரிய வாய்ப்பாக அமைத்துக்கொள்வோம் என்று மோடி கூறியதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

பூடான் மன்னர் மற்றும் பிரதமர் உடனான சந்திப்புகளின் போது, ‘இருநாட்டு தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொருளாதார உறவுகளை இன்னும் மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதுகுறித்து பேசினர்’ என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்புகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கூறுகையில், ‘பாரதத்திலிருந்து பூடானுக்கான நட்புறவு’ என வர்ணித்தார். மேலும் இந்தியாவுக்கு வெளியேயான தனது இந்தபயணம் வெற்றிகரமாக அமைந்ததற்காக பூடான் தலைவர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

மோடியை சந்தித்தது குறித்து ஷெரிங் தோப்கய் விவரிக்கையில், ‘மோடி நட்பு ரீதியானவர். சிறந்த அறிவுத் திறன் கொண்டவராகவும் உள்ளார். அவர், பூடானுக்கு அனைத்து வழிகளிலும் துணையாய் இருப்பதாக உறுதி அளித்தார். அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்தியாவிடமிருந்து பூடானுக்கு கிடைக்கப் பெறும் பொதுவான ஆதரவு மற்றும் வாக்குறுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது’ என்றார்.

மாலையில் திம்பு நகரில் நடந்த விழாவில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட அந்நாட்டின் சுப்ரீம்கோர்ட்டை பிரதமர் திறந்து வைத்தார்.

மேலும் இந்தியாவில் படிக்கும் பூடான் மாணவர்களின் கல்வி உதவித் தொகையை ரூ.2 கோடியில் இருந்து 4 கோடி ரூபாயாக அதிகரித்தும் மோடி அறிவித்தார்.

திம்பு செல்லும்முன் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பூடான், நமது நட்புக்கு இயற்கையான தேர்வு ஆகும். அதன் காரணமாகவே தனித்துவ, விசேஷ நட்புறவுக்காக பூடானை எனது மனம் உவந்த முதல்வெளிநாட்டு பயணமாக தேர்ந்தெடுத்தேன். இந்திய அரசு தனது வெளிநாட்டு கொள்கைகளில் பிரதான முன்னுரிமையை பூடானுக்கு அளிக்கும். எனது இந்தபயணம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் விசேஷ நட்புறவை மேலும் வலுப்படுத்த உதவும்.

மன்னர் ஆட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சிமுறைக்கு மென்மையாக மாறிய பூடானின் ஆட்சியமைப்பு வெற்றிகரமாக அமைந்த ஒன்றாகும். உரியநேரத்தில் அங்கு முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு வலுவான ஜனநாயகத்துடன் கூடிய புதிய அரசமைப்பு உருவானதற்கு மன்னர் குடும்பத்தினரின் பெருந்தன்மையும் காரணமாகும்.

இந்திய அரசு பூடானின் சமூகபொருளாதார வளர்ச்சிகளில் சிறப்பு அந்தஸ்துபெற்ற, முன்னணி கூட்டாளியாக திகழும். பூடானின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி, செழிப்பிற்கான அதன் முன்னேற்றம் நமக்கு மகிழ்ச்சிதருகிறது. தொடர்ந்து அந்நாட்டின் வளர்ச்சிக்கு நாம் ஆதரவு அளிப்போம். பூடான் உடனான நீர் மின் திட்டம் இந்த பிராந்தியம் முழுவதற்கும் ஒருசிறந்த உதாரணமாக திகழும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply