ராமேசுவரம், மண்டபம், பாம்பன், ஜெகதா பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த 7-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 82 மீனவர்களை கைது செய்து இலங்கைகொண்டு சென்று கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 82 பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து 82 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு ராமேசுவரம், மண்டபம்வந்தனர். ஆனால் அவர்களுடன் பிடித்து செல்லப்பட்ட 23 படகுகள் விடுவிக்கப்படாமல் தலை மன்னார் மற்றும் காங்கேசன் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தபடகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம், பாம்பன்பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஒருவாரமாக 900-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக துறைமுகபகுதி மற்றும் கடற்கரை பகுதிகள் வெறிச் சோடி காணப்பட்டன. மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.

இதைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவ சங்க பிரதிநிதிகள் தேவதாஸ், போஸ், சேசுராஜா உள்ளிட்ட 10 பேர்கொண்ட குழுவினர் சென்னைக்கு சென்றனர். நேற்று முன்தினம் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர்கள் பேசினர். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் மீட்டு தமிழகம் கொண்டுவருவதற்கும், இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் இல்லாமல் மீனவர்கள் மீன்பிடித்து வர பிரதமர் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரிடம் மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை மனுகொடுத்தனர்.

இலங்கையில் உள்ள அனைத்து படகுகளையும் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மீனவர்கள் சிறை பிடிக்கப் படாமல் இருக்க வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மாசுவராஜ் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நீடித்த மீனவர்களின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று 16-ந்தேதி இன்று முதல் மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்துள்ளோம். மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கரையோர பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அனைத்து மீனவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply