மத்தியில் பா.ஜ.க தலைமையிலான புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றபின், முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, பூடான் சென்றிருந்தார். பூடானுடன் மின்சாரம், கல்வி உள்ப்பட பல்வேறு வர்த்தக உறவுகள் மற்றும் கலாசார உறவுகள்குறித்து அந்நாட்டு பிரதமர் ஷெரிங்தோப்கே மற்றும் மன்னர் வாங்சுக் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், ஜூலை இரண்டாம் வாரத்தில் ஜப்பான் சுற்றுப் பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.ஜப்பானுக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ளும் மோடி, டோக்கியோவில் ஜப்பான் பிரதமர் அபே ஜின்சோவை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியது.

இந்நிலையில், ஜூலை மாதம் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளதால் பிரதமர் மோடியின் ஜப்பான் சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்படும் என பி.டி.ஐ செய்திநிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 7ம் தேதி தொடங்கி மூன்று வாரங்கள் நடைபெற்று ஜுலை 28ல் நிறைவுபெறும் என்று கூறப்படுகிறது. நரேந்திரமோடி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரின் தேதியை மத்திய அமைச்சகம் இறுதி செய்து விட்டது என்றும் இருப்பினும் முறையான அறிவிப்பு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் ஒப்புதலுக்கு பிறகே வெளியாகும் என தெரிகிறது.

இதன் காரணமாக பிரதமரின் ஜப்பான் பயணம் பட்ஜெட் கூட்டதொடர் நிறைவுபெற்ற பிறகு ஆகஸ்ட் மாதம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply