இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை (ஐஹெச்ஆர்எஃப்) தொகுத்துள்ள, ஹிந்துமதம் தொடர்பான முதல் கலைக்களஞ்சியத்தை (என்சைக்ளோபீடியா) குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி திங்கள்கிழமை வெளியிட்டார்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்தநூலை பிரணாப் முகர்ஜி வெளியீட்டார். ஹிந்துமதம் தொடர்பாக இப்படியொரு அரியதொகுப்பை தயாரித்து வெளியிட்டதற்காக ஐ.ஹெச்.ஆர்.எஃப் நிறுவனர் தலைவரும் ரிஷிகேஷில் உள்ள பரமார்த்த நிகேதன் அமைப்பின் தலைவருமான ஸ்வாமி சித்தானந்த சரஸ்வதியை பிரணாப் பாராட்டினார். இந்தவிழாவில், பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர்பிரசாத், உமா பாரதி, ஸ்வாமி சித்தானந்த சரஸ்வதி, “தேரி’ பல்கலைக் கழக வேந்தர் ஆர்.கே.பச்சோரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பிரணாப்முகர்ஜி பேசியதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஹிந்து மதம் என்பது ஒரு நம்பிக்கையல்ல; பல்வேறு நியதிகள் மற்றும் உள்ளுணர்வுகளின் சங்கமம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறியதுபோல, அந்தமதத்தை வரையறுக்க முடியாது. உணரத்தான் முடியும்.

எல்லோரும் முழு ஆரோக்கியத் துடனும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதும், யாரும் துன்பங்கள் துயரத்துக்கு ஆளாகக் கூடாது என்பதே ஹிந்துமதத்தின் அடிப்படை சித்தாந்தமாகும் என்று பிரணாப் பேசினார்.

இதனிடையே, “இந்த கலைக் களஞ்சியத்தைத் தொகுப்பதற்கு 25 ஆண்டுகள் ஆனது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகாலவரலாறு, அறிவியல், கலை, கட்டடக்கலை, அரசியல், மதம், தத்துவம் மற்றும் கலாசாரத்தின் தொகுப்பாக விளங்கும் இந்த நூலில் ஹிந்துமதம் மட்டுமல்லாது, இந்திய கலாசாரத்துடன் தொடர்புடைய சமணம், பெளத்தம் மற்றும் சீக்கிய மதங்கள் பற்றிய தகவல்களும் அடங்கியுள்ளன’ என்று இந்த நூலை வெளியிட்டுள்ள இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Leave a Reply