சமையல் எரிவாயு சிலிண்டர், கெரசின் விலையை உயர்த்துவது குறித்து கனவிலும் நினைக்க வில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

மோசமான நிதி நிலைமையை சீர்படுத்தவும், மானிய சுமைகளை குறைக்கவும், பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்று உள்ள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர், கெரசினுக்கு மத்திய அரசு தற்போது ரூ.80 ஆயிரம் கோடி மானியம் வழங்கிவருகிறது. இதில், சமையல் எரிவாயுவுக்கு ரூ.50,324 கோடியும், கெரசினுக்கு ரூ.29,488 கோடியும் மானியமாக செல்கிறது.

எனவே, இந்த நிதிச்சுமையை குறைப்பதற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூ.5ம், கெரசின் விலையை லிட்டருக்கு மாதந்தோறும் 50 காசுகள் முதல் ரூ.1 வரையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வதந்தி கிளம்பியது இதனால், மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, எரிவாயு சிலிண்டர், கெரசின் விலையை உயர்த்தும் திட்டம் குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நிருபர்கள் கேட்ட போது, ”இவற்றின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை.

அதைபற்றி நாங்கள் நினைத்துகூட பார்க்கவில்லை” என்றார். இதன்மூலம், சிலிண்டர் மற்றும் கெரசின் விலைகள் உயரும் என்ற யூகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply