முதல் முறையாக பாராளு மன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்..பி.க்களுக்கு வழங்கப்படும் பயிற்சிமுகாமில் எம்.பி.க்கள் முன் அத்வானி பேசியதாவது;

பேடஸ்மேன் மோடி அணியின் கேப்டனான உடன் தனது முதல்டெஸ்ட் போட்டியிலேயே மூன்று சதம்(300 ரன்கள்) அடித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் அணியைபோல், நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கட்சியை தலைமை மற்றும் தே.ஜ., கூட்டணியின் தலைமை ஏற்று நடத்திய மோடி மகத்தானவெற்றி பெற்றுத்தந்தார். மேலும் பாஜக 282 இடங்களையும், தே.ஜ.கூட்டணி 336 இடங்களையும் பிடித்ததற்கு மோடியே காரணம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது அறிமுகப் போட்டியிலேயே பேட்ஸ் மேன்கள் ஒருசதம் அல்லது இருசதம் அடித்து பார்த்திருக்கிறோம். ஆனால், பேட்ஸ்மேனான ஒருவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று முச்சதம் அடித்ததை இப்போதுதான் நான் முதன் முதலாக பார்க்கிறேன் .

நீங்கள் அனைவரும் அரசாங்கத்தின் முகங்கள் என்பதோடு பிரதமர் மற்றும் மந்திரிகளது முகங்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. நாம் அனைவரும் அரசின் பிரதிநிதிகளாக இருக்கிறோம். ஏனென்றால் இப்போது நாம் ஆளும் கட்சி எம்.பி.க்கள். எனவே, எவ்வித சர்ச்சைகளிலும் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. அதே போல் தவறான நடத்தைகளிலும் ஈடுபடக்கூடாது. உங்கள் தொகுதியின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் மிகுந்த நெருக்கம் வைத்துக் கொள்ளுங்கள். கட்சியின் அமைப்புகளுடனும், கீழ்மட்ட அளவிலும் வலிமையான உறவை ஏற்படுத்திக் கொண்டால்தான் உங்களுக்கு மாநிலத்திலும், தொகுதியிலும் நல்ல பெயர் கிடைக்கும்.

இதுவரை நான் சந்தித்த பாராளுமன்றங்களிலேயே 16-வது பாராளுமன்றம்தான் மிக வித்தியாசமானது. ஏனென்றால் இந்த பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கூட கிடையாது. இதனால் பா.ஜனதாவின் புதிய எம்.பி.க்களுக்கு மட்டும் அல்ல, கட்சியின் எம்.பி.க்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. ஏனெனில் நாம் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி செயல்படுகிறோம் என்பதை ஊடகத்துறையினரும், அரசியல் நோக்கர்களும் மிக உன்னிப்பாக கவனிப்பார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சில கடினமான முடிவுகளை எடுக்கப் போவதாக கூறி இருக்கிறார். எனவே, அத்தகைய முடிவுகள் ஏன் எடுக்கப்பட்டன என்பதையும் அதனால் நாட்டுக்கு எதிர்காலத்தில் என்ன நன்மை என்பதையும் சாதாரண மக்களிடம் நாம் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி அண்மையில், காங்கிரஸ் கட்சி தனது மதச் சார்பற்ற கொள்கைக்காக சிறுபான்மையினர் பக்கம் சரிந்ததால், காங்கிரசில் இருந்த பெரும்பான்மையினர் கட்சிக்கு அன்னியமாகி போய்விட்டனர் என்று கூறியிருப்பதை பாராட்டுகிறேன். அவரது நிலையை மற்ற காங்கிரஸ் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply