பாஜக.,வை அமெரிக்கா வேவுபார்த்த விவகாரம் குறித்து கடுமையான எதிர்ப்பை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் வருடம் இந்தியாவின் பாஜக உட்பட 6 வெளிநாட்டு அரசியல்கட்சிகளை அமெரிக்கா வேவுபார்த்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்மனை ஏற்று தூதரக உயர்அதிகாரி ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்தார். இந்தசந்திப்பின் போது இந்தியாவின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்ற உறுதி மொழியை தருமாறும் அமெரிக்க தூதரக அதிகாரியிடம் இந்திய அரசு தரப்பில் உறுதிகோரப்பட்டது. இருப்பினும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வந்த அமெரிக்க தூதரக அதிகாரியின் பெயர் தெரிவிக்கப்பட வில்லை.

அமெரிக்காவின் உளவு அமைப்பான என்எஸ்ஏ., பல்வேறு நாடுகளின் அரசுகளையும், இந்தியாவில் பாஜக, பாகிஸ்தானில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, லெபனானில் அமால்கட்சி, எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி உள்பட பல்வேறு நாடுகளின் முக்கிய கட்சிகளையும் 2010-ம் ஆண்டிலிருந்து வேவுபார்த்ததாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக என்.எஸ்.ஏ.வின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் வெளியிட்ட அறிக்கையை மேற்ககோள்காட்டி, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கடந்த திங்கள் கிழமை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply