எப்படா அடுத்தவனை அவமானப்படுத்த ஒருவாய்ப்பு கிடைக்கும் என அல்ப சந்தோசத்தோடு அலையும் மக்கள் எக்கச்சக்கம். ஏன்தான் மக்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்களோ ? என நாம் பலவேளைகளில் தலையைப் பிய்த்துக்கொள்வோம். விஷயம் புரிபடாது ! பெரும்பாலான அவமானங்கள் மூன்று வகைதான். ஒன்று நம்ம உருவம் சார்ந்தது. இரண்டாவது நமது செயல்சார்ந்தது. மூன்றாவது நமக்கு சம்பந்தமே இல்லாத நம்ம சூழல் சார்ந்தவிஷயம்.

இதுல ஏதாவது நாலுகுறை கண்டுபிடித்து நம்ம காதுல கொஞ்சம் ஈயம் ஊற்றிட்டு அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க. நாம அந்த வார்த்தைகளை திரும்பத்திரும்ப நினைச்சுப்பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம். இல்லேன்னா, அந்த அவமானத்தை மறைக்க நம்ம பங்குக்கு நாமும் நாலுபேரை இன்சல்ட் பண்ணிட்டு திரிவோம். இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.

"நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும் " என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறைமாதிரி உரமாயிடும். அதேபோல அவமானங்களை சந்திக்கும் மனசும் உடைந்துவிடாமல் அவமானங்களை திறமையாக சமாளித்தால் வலிமையாகிவிடும். அப்படி ஒருமனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடு கட்டிக் குடியிருக்கலாம்.

அவமானங்களை எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில்வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப்பெற்றுக் கொள்பவர்கள்தான் வெற்றியாளர்கள்.
பள்ளி இறுதியாண்டு தேர்வுமுடிவு வரும்போது முதல் பக்கத்தில் சாதனைபுரிந்த மாணவர்களின் படங்கள் வரும். தொடர்ந்த நாளிதழ்களில் தோற்றுப்போய் விட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களும் இடம்பெறுவதுண்டு. ஒருசாதாரண தேர்வில் தோற்றுப் போவதை கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்கமுடியும் ?

அடைக்கப்பட்ட ஒருகதவின் முன்னால் நின்று புலம்புவது திறந்திருக்கும் கோடானுகோடி கதவுகளை உதாசீனப்படுத்துவதற்குச் சமமல்லவா ? பள்ளிக்கூடத்தில் தோற்றுப்போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பவர்கள் வின்ஸ்டன் சர்ச்சிலை அவமானப்படுத்துகிறார்கள். அவர் ஆறாம் வகுப்பிலேயே தோற்றுப் போனவர். அந்த தோல்வியுடனேயே மனம் உடைந்து போயிருந்தால் பின்னாளில் அவர் அடைந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா ? இங்கிலாந்து நாட்டில் இரண்டுமுறை பிரதமராய் இருந்தவர் சர்ச்சில். பிரிட்டிஷ் பிரதமர்களிலேயே இலக்கியத்துக்கான நோபல்பரிசு வாங்கியவர் இவர் மட்டும்தான். ஆறாம் வகுப்பில் தோல்விபெற்ற ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கிறது ! இதுதான் தன்னம்பிக்கையின் வியப்பூட்டும் விளையாட்டு.

தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக்கூடாது

Comments are closed.