வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்துவதன் மூலம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தவர் ஒவ்வொருவர் மனதையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கத்ரா – உதம்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில்சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைத்தார். கத்ராவில் இருந்து 25 கிமீ. தொலைவில் உள்ள மாதா வைஷ்ணோதேவி கோயிலுக்குச் செல்கிறது இந்த ரயில்.

இந்நிகழ்ச்சியின் போது ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திராசிங் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ரயில் சேவையை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, “ரூ.1,150 கோடி செலவில் இந்த ரயில்சேவை உருவாகி உள்ளது. இதன் மூலம் சாமான்ய மக்களும் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது.

ஜம்மு – கத்ரா ரயில்சேவைக்கு ஸ்ரீசக்தி எக்ஸ்பிரஸ் என்று பெயரிடலாம். ஜம்மு – காஷ்மீரில் மேலும் பலபுதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரயில்வே துறையில் சூரிய ஒளி மின் சக்தி அதிகளவில் பயன்படுத்தப்படும்.

ஜம்முவளர்ச்சி ஒரு போதும், எவ்வகையிலும் பாதிக்கப்படாது. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தவர் ஒவ்வொருவர் மனதையும் வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

இம்மாநிலம் ஏற்கெனவே நிறைய பிரச்சி னைகளை சந்தித்து விட்டது. இனி இங்கு வளர்ச்சியும், அமைதியும் நிலைத்திடவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்

Leave a Reply