தமிழ்புத்தாண்டு தொடங்கும் முதல்வாரத்தை ‘தமிழ் வாரமாக’அறிவித்து நாடுமுழுவதும் கொண்டாட வேண்டும் என மத்திய அரசை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளை யொட்டி மதுரை கே.கே.நகரிலுள்ள அவரது சிலைக்கு இல.கணேசன் திங்கள்கிழமை மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தமிழகத்தில் மட்டும் தான் சினிமா கொட்டகைபோல கோயில்களில் பக்தர்களிடம் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன.

கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளின் வருமானத்தை வசூலித்தாலே, பக்தர்களுக்கு இலவசதரிசனம் மட்டுமல்ல அன்னதானமே வழங்கமுடியும். ஆனால் அந்த வருமானத்தை வசூலிப்பதில் அரசு திறமையைக் காட்டாமல் பக்தர்களிடம் பணம்வசூலித்து, ஏற்றத்தாழ்வு காட்டுவது பொருத்தமல்ல.

பிரதமர் ஆவதற்கு முன்பே நரேந்திரமோடிக்கு இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் நன்குதெரியும். சுஷ்மாஸ்வராஜ் அதை விட அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார். நாங்களும் சொல்லி இருக்கிறோம். புதிய ஆட்சி வந்த பிறகு இலங்கை மீதான அணுகுமுறை, இலங்கை அரசுக்கு இந்தியா மீதுள்ள அணுகுமுறையில் லேசானமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே எல்லாம் முடிந்துவிட்டதாகக் கருதமுடியாது. பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அரசு மத்தியில் இருக்கிறது. இந்திய மீனவர்கள்மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. விரைவில் சுமுகத்தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்தியாவின் எல்லா மொழிகளுமே தேசிய மொழிகள்தான். சமஸ்கிருத வாரவிழா கொண்டாடுவதில் தவறில்லை. அதேசமயம் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டையும் சமமாகப்பாவித்து நான் ஏற்கெனவே ஒரு வேண்டுகோளை மத்திய அரசுக்கு விடுத்துள்ளேன். ஏப்.14ம் தேதி தொடங்கி ஒருவாரம் அதாவது தமிழ் புத்தாண்டு தொடங்கும் முதல்வாரத்தை தமிழ் வாரமாக அறிவித்து, நாடுமுழுவதும் விழா எடுக்கவேண்டும். தொடர்ந்து இதை வலியுறுத்துவேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவசியமானது. அதேசமயம் மழைக்காலங்களில் பெருகிவரும் வெள்ளம் வீணாக கடலில்கலக்காமல் இருக்க, பல இடங்களில் தடுப்பணைகளை கட்டவேண்டும். நிரந்தர ஏற்பாடான நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுவிட்டால் 365 நாளும் காவிரியில் தண்ணீர் ஓடும். இவ்வாறு இல. கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply