ஆர்.எஸ்.எஸ் அகிலபாரத தலைவர் மோகன்பாகவத் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பாதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கேரளத்தை சேர்ந்த நபரை பிடித்தபோலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அகில பாரத ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்திருந்தார். இங்கு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழாவில் பங்கேற்றார். மோகன் பாகவத் வருகையை ஒட்டி மதுரை நகரிலும், புறநகர்பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

குரு பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு மோகன் பாகவத், கார்மூலம் நாகர்கோவில் சென்றதால், மதுரை- விருதுநகர் சாலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது.

திருமங்கலம் கள்ளிக்குடி அருகில் கே.வெள்ளாளகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் கையில்பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரிடம் போலீஸார் விசாரித்தனர். அந்த நபர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் கத்தியும், ரூ.4700 பணமும் இருந்தது. கத்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸார், அவரை கள்ளிக்குடி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் ஏ.டி.எஸ்.பி. சியாமளாதேவி மற்றும் காவல் துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அந்த நபர் கேரளமாநிலம் எர்ணாகுளம் எழுவங்கர் ஊரைச்சேர்ந்த அப்துல் கபூர் (40) என்பதும், அவர் எர்ணாகுளத்தில் ஹோட்டலில் பணிபுரிந்ததும், வேலை தேடி தமிழகத்துக்கும் வந்ததும், முதலில் கோவைக்கு சென்ற அவர் அங்கு வேலை கிடைக்காமல் மதுரை வந்ததாகவும், மதுரையிலிருந்து விருதுநகருக்கு சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply