டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்திற்கு தினமும் ஒரு மத்திய அமைச்சர் சென்று கட்சித் தொண்டர்களின் குறைகளை கேட்டறியும் நிகழ்ச்சியை நாளை (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த பா.ஜ.க தலைமை முடிவுசெய்துள்ளது.

இம்மாதம் 2ம் தேதி, பா.ஜ.க, தலைவர்களுடன், பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘கட்சிக்கும், அரசுக்கும் இடையே சிறப்பான ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும். அத்துடன், நாடு முழுவதிலும் இருந்து, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரும், தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், அரசின் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்த, கருத்துக்களை கேட்டறியவேண்டும்’ என, தெரிவித்தார்.

மோடியின் இந்த யோசனைப் படி, மாதம் ஒரு முறை, ஒவ்வொரு அமைச்சரும், டில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விஜயம்செய்வர். இதன்மூலம், ஒவ்வொரு நாளும், யாராவது ஒருமத்திய அமைச்சர், கட்சி அலுவலகத்தில்இருப்பதோடு, கட்சியினரின் குறைகளையும் கேட்டறிவார். இந்த அடிப்படையில், மத்திய அமைச்சர்கள் பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்வது, நாளை முதல் துவங்க உள்ளது.

முதல் நாளன்று, மத்திய கனரக தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தொண்டர்களின் குறைகளை கேட்டறிவார். மறு நாளான வியாழக் கிழமை, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் சஞ்சீவ்குமார் பால்யன், அதே நேரத்தில் தொண்டர்களை சந்திப்பார். வெள்ளிக்கிழமை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப்பணியை மேற்கொள்வார்.

ஒவ்வொரு அமைச்சரும், மாதத்தில் ஒருமுறையாவது, கட்சித்தலைமை அலுவலகம் வந்து, தொண்டர்களைச் சந்திக்கவேண்டும். அதே நேரத்தில், டில்லியை விட்டு வெளியேசெல்லும் போது, மாநிலங்களில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, அங்கும் தொண்டர்களைச் சந்திப்பர். கட்சித் தொண்டர்களை, அமைச்சர்கள் சந்திப்பது, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், ‘ஆதரவு’ என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டத என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply