ஒரு பள்ளிக்கூட‌ மைதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் அகலம் எவ்வளவு, அதன் நீளம் எவ்வளவு என்பதை நீங்கள் வரையறுத்துவிடலாம். பள்ளியில் என்ன விளையாட வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்றும் நீங்கள் குறிப்பிட்டு விடலாம். ஆனால் பிரபஞ்சத்தை அவ்வாறு வரையறுக்க‌ முடியுமா ? பள்ளிக் கூட மைதானத்தையும், பிரபஞ்சத்தையும் எப்படி ஒப்பிட இயலாதோ அது போலவே மற்ற மதங்களையும், சனாதன தர்மத்தையும் ஒப்பிட இயலாது.

ஒரு பள்ளிக்கூட‌ மைதானம் போல இரு ஆப்ரகாமிய மதங்களிலும் தெளிவான‌ வரையறைகள் இருக்கும். அதன் கொள்கை என்ன, அதை வெளிப்படுத்தியவர் யார். விளையாடும் மாணவர்களுக்கு தருவது போல் ஐந்து மற்றும் பத்துக் கட்டளைகள். பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிப்பது போல் இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற கட்டளைகள். பாடம் பயில் இது அவசியமானது. ஆனால் எல்லையற்றதை நோக்கி செல்ல இவை போதுமா ? எல்லையற்ற நிலையை அறிந்துக் கொள்ள, எல்லையற்ற ஒன்றை அல்லவா நாம் பற்றிக் கொள்ள வேண்டும் ?

சனாதன தர்மமோ எல்லையற்ற பிரபஞ்சம், அது எல்லையற்ற சுதந்திரத்தை ஆதாரமாக கொண்டது. சுகமும், துக்கமும் நம்மை மாற்றி மாற்றி சூழ்ந்து பிடித்துக் கொண்டிருக்கும் இந்த அடிமை தளத்திலிருந்து விடுபட்டு உண்மையான பரிபூரன சுதந்திரத்தை நோக்கி நம்மை அது கொண்டு செல்லும். (இதை குறித்து விரிவாக பிறகு பார்ப்போம்)

எல்லையற்ற சனாதன தர்மத்தில் இறைவன் எல்லையற்ற தோற்றங்களில் வணங்க‌ப்படுகிறான். அதோடு அருவமாகவும், உருவமாகவும் பலவகையில் அவன் வழிபட படுகிறான். இறைவன் எங்கோ ஒரு மூலையில் மட்டும் இல்லை இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கின்றான் என்கிறது வேதம் ( ஈஷ்வரா சர்வ பூதானாம்) இறைவன் இடைவெளி இல்லாமல் எல்லாவிடத்திலும் பரவி இருக்கின்றான் என்றும் அது சொல்கிறது. (ஈஷாவாஸ்யம் இதம் ஜகத்)

தன்னை வெளிப்படுத்தாத பரப் பிரம்மமாக (Unmanifested Brahman) பலர் அவனை அருவமாக பாவித்து வணங்குகிறார்கள். அவனை தங்களுக்கு பிடித்த வகையில் சிலைகளாகவும், ஜோதியாகவும், லிங்கமாகவும், சாலிகிராமம் போன்ற படிமங்களாகவும் அவனை வணங்குகிறார்கள்.

அது என்ன வெளிப்படுத்தாத பரப் பிரம்மம் ? வேதம் இதை “ஹிரன்யகர்பா” என்று அழைக்கிறது. அதாவது ‘தங்க முட்டை’ அல்லது ‘தங்க கருவறை’ என்று இது பொருள்படும். எது எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறதோ, எதிலிருந்து எல்லாமே தோன்றியதோ அதுவே “ஹிரன்யகர்ப” என்று அழைக்கப்படுகிறது. இந்த வெளிப்படுத்தாத நிலையில் அந்த பரப்பிரம்மம் தன்மைகள் அற்று இருக்கிறது. அதனிடமிருந்தே அனைத்தும் வெளிப்படுகிறது.

சரி அப்படியென்றால் இந்த பரப்பிரம்மம் அல்லது இறைவன் ஒன்றா அல்லது பன்மையா ?

“ஏகம் ஏவத்விதியம் பிரம்மா” என்கிறது சாந்தோக்ய உபநிஷத். அதாவது இறைவன் இரண்டாவது இல்லாத ஒன்றே ஒன்றுதான் என்கிறது. வேத வாக்கியங்களை புரிந்து கொள்ள வெறும் மொழிப் புலமை மட்டும் போதாது. ஆழமான ஆன்மீக விழிப்புணர்வே அதற்கு அவசியமாகிறது. அதனால் தான் மிகசிறந்த ஞானிகளால் மட்டுமே அவற்றிற்கு பாஷ்யங்கள் (உரை) தர முடிகிறது. சில அரைவேக்காட்டு ஆப்ரகாமிய அறிஞர்கள் இந்த வாக்கியங்களை மட்டும் குறிப்பெடுத்துக் கொண்டு இறைவன் ஒன்றுதான் அவனை சிலைகளாக, அவதாரங்களாக, பல கடவுளர்களாக பார்ப்பது வேதத்திற்கு எதிரானது என்று மனநோயாளிகளை போல் பேசுகிறார்கள்.

இறைவன் ஒருவனே என்றால் அவன் பன்மையில் இல்லையா என்கிற கேள்வி எழுகிறது ?

இறைவன் சத் எனப்படும் அனைத்து பொருளாக‌ இருக்கின்றான், சித் எனப்படும் உணர்வாகவும் இருக்கின்றான், ஆனந்தம் எனப்படும் ஆனந்த நிலையிலும் இருக்கின்றான் என்கிறது வேதம். அதையே “சச்சிதானந்த” நிலை என்கிறோம். அவன் இல்லாத இடமே இல்லை, அவன் இல்லாத உருவமே இல்லை இப்படி அவன் எங்கும் வியாபித்து ஒருமை பண்மைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறான். எண்ணிக்கைகளுக்கு அடங்காத எல்லைகளற்றவன் இறைவன். அவனை நீங்கள் ஒருவன் என்றும் சொல்லலாம், பல என்றும் சொல்லலாம்.

சுருங்கச் சொன்னால் நம் காரண அறிவால் அறிந்துக் கொள்ள முடியாதவன் இறைவன்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.