இந்தியாவுடன் நேருக்கு நேராக மோத பலமில்லாததால் தீவிரவாதம் மூலம் பாகிஸ்தான் மறை முகமாக போரிட்டுவருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் லே மற்றும் கார்கில்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்களை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். முதலில் லே பகுதிக்குச்சென்ற அவர் பின்னர் கார்கிலுக்கு சென்றார். அங்குள்ள ராணுவ முகாம்களில் வீரர்கள்மத்தியில் அவர் பேசியதாவது:

ராணுவ வீரர்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது நமதுகடமை. அதனால்தான் அடிக்கடி ராணுவ வீரர்களை சந்தித்துவருகிறேன்.

ஒட்டுமொத்த நாடும் உங்கள் (வீரர்கள்) பின்னால் நிற்கிறது. நாட்டுக்காக வீர மரணமடைந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும்வகையில் விரைவில் தேசியபோர் நினைவுச்சின்னம் கட்டப்படும். கார்கில் ஊடுருவலின்போது தாஷி நாம்கியால் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளிதான் ராணுவத்துக்கு முதன்முதலாக தகவல் அளித்தார். இது போல் இந்திய ராணுவம் எப்போதும் எல்லையோர கிராம மக்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்க வேண்டும்.

கார்கில் மக்களின் தேசப்பற்று தேச மக்களை ஊக்குவிக்கிறது. இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தலை வணங்குகிறேன். இளைஞர்கள் கடுமையாக உழைக்க முடியும். பணம் சம்பாதிக்க முடியும், குடும்பத்திற்கு உதவி செய்ய முடியும் என நான் உறுதி அளிக்கிறேன்.  கார்கிலுக்கு நாட்டின் பிறபகுதியுடன் இணைப்பை மேம்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள மக்களுடன் கார்கில் மக்களை இணைப்பது நமது பொறுப்பு. வளர்ச்சியை ஏற்படுத்த நாம் ஆர்வமாக உள்ளோம்

இந்தியாவுடன் நேருக்கு நேர் போரிடும் பலம் நமது அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தான்) இல்லை. அதனால்தான் அந்த நாடு தீவிரவாதம் மூலம் நம்மோடு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது.

ராணுவத்துக்கு போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட தீவிர வாதத்தால் அதிக உயிரிழப்புகள் நேரிட்டு வருகின்றன. தீவிரவாதம் என்பது உலகளாவிய பிரச்சினை. அதற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போர்தொடுக்க வேண்டும்.

லே மாவட்டத்தில் 45 மெகாவாட் நிமு பாஸ்கோ நீர்மின் நிலைய திட்டத்தையும் கார்கில் மாவட்டத்தில் 44 மெகா வாட் சவுகத் நீர்மின் நிலைய திட்டத்தையும் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:

நாட்டை ஊழல் அரித்து கொண்டிருக்கிறது. அதை தடுக்க ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தனது முழுபலத்துடன் போரிடும். ஊழலை நாம் வெற்றி கண்டு விட்டால் வறுமைக்கு எதிரான போரிலும் நாம் வெற்றி அடைந்து விடுவோம். நான் லஞ்சம் வாங்கவும் மாட்டேன், யாரும் லஞ்சம்வாங்க அனுமதிக்கவும் மாட்டேன். இது தான் எனது கொள்கை.

ஒருகாலத்தில் காஷ்மீர் மாநிலத்துக்கு பிரதமர்கள் வருவது கிடையாது. நான் பதவியேற்ற பிறகு 2 முறை காஷ்மீருக்கு வந்துள்ளேன். ஜம்மு-காஷ்மீர் பாஜகவில் நான் கட்சி பணியாற்றியுள்ளதால் இந்தப்பிராந்திய மக்களின் பிரச்சினைகளை நன்கறிவேன்.

மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த 2 லட்சம் அகதிகள், 4 லட்சம் காஷ்மீர் பண்டிட்டுகள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 லட்சம்பேர் என காஷ்மீர் மக்கள் தொகையில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் மாநிலத்தைவிட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களை மீண்டும் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். அவர்களும் நமதுசகோதர, சகோதரிகள் தான். அவர்கள் குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும் என்றார் மோடி.

Leave a Reply