இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியான நடவடிக்கை எடுப்பார் என்று இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு புதன் கிழமை மாலை வந்த அவர், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர ராஜன்,

சுமார் ஒன்றரை மணி நேரம் நடை உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் கூறியது:

கடந்த ஆகஸ்ட் 23 இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை தில்லியில் சந்தித்துப் பேசினோம். அனைத்தையும் மிகவும் பொறுமையுடன் கேட்டறிந்த மோடி, எங்களுக்கு சில அறிவுரை களையும் வழங்கினார்.

பிரதமராகப் பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் நடந்த பேச்சின் போது, இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் என உறுதியுடன் தெரிவித்ததாக மோடி கூறினார்.

ஒருங்கிணைந்த இலங்கை எனும் வரையறைக்குள் சம உரிமை, சுயமரியாதை, கண்ணியம், கௌரவத்துடன் தமிழர்கள்வாழ, அரசியல் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது இந்தக்கருத்தை நாங்களும் ஏற்கிறோம்.

13-ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாநிலங்களை இணைக்கவேண்டும், சிங்களர்களுக்கு சமமாக அனைத்து உரிமைகளுடன் வாழ தமிழர்களுக்கு அதிகாரம்வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற இந்திய அரசு உதவ வேண்டும் என மோடியிடம் வலியுறுத்தினோம்.

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களர்களையும், ராணுவத்தினரையும் நிரந்தரமாகக் குடியமர்த்தும் முயற்சியில் ராஜபட்ச அரசு ஈடுபட்டுவருகிறது. தமிழ்ப் பள்ளிக்கூடங்களும் ஆலயங்களும் இடிக்கப்படுகின்றன.

தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் மொழி, கலாசார மாற்றத்தை ஏற்படுத்தி விட்டால் அரசியல் தீர்வு காணவேண்டிய அவசியம் ஏற்படாது என இலங்கை அரசு கருதுகிறது. வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தமிழர் அரசையும் முடக்க நினைக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதில் ராஜபட்சவுக்கு அக்கறை இல்லை. இதுபோன்ற விஷயங்களை பிரதமர் மோடியிடம் தெரிவித்தோம்.

இலங்கைத் தமிழர் பிரச்னைகள் தீர அனைத்து நடவடிக்கை களையும் எடுப்பதாக மோடி உறுதியலித்தார். அவருடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாகவும் முழுநம்பிக்கை தருவதாகவும் இருந்தது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகிடைக்க மோடி உறுதியான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மோடியுடனான சந்திப்பின் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர்களைச் சந்தித்து விவாதித்தோம். இதனால் இலங்கை தமிழர் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிரச்னைகள் இல்லாமல் மீன்பிடிப்பதற்கு இந்திய – இலங்கை மீனவர்கள் சந்தித்துப் பேசி தீர்வுகாண வேண்டும் என்றார் சம்பந்தன்

Leave a Reply