ஆசிரியர்கள் காலமாற்றத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பித்து கொள்வதுடன், மாணவர்களையும் மாற்றத்துக்கு ஏற்ப தயார்படுத்தவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தினச்செய்தியாக அறிவித்துள்ளார். .

ஆசிரியர் தினத்தை யொட்டி தேசியவிருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது மோடி பேசியதாவது: "கல்விகற்பித்தல் வெறும் பணியல்ல, அது வாழ்வியல்முறை. மாறிவரும் சர்வதேச சூழலை கருத்தில்கொண்டு புதிய தலை முறையினரை ஆசிரியர்கள் உருவாக்கவேண்டும். அவர்களது நாட்டத்தை தெரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை உருவாக்க வேண்டும். ஒரு சமுதாயம் முன்னேறிச்செல்கிறது என்றால், ஆசிரியர்கள் எப்போதும் இரண்டு அடிகள் முன்னால் செல்ல வேண்டும்.

'சமூக வளர்ச்சியில் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் என்பது ஒருபணி அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை. தன்னலமற்ற சேவை கொண்டது ஆசிரியப் பணி.

ஆசிரியர்கள் இரண்டு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, மாற்றத்தை ஏற்படுத்துவது. மற்றொன்று, மாணவர்களையும் மாற்றத்திற்கு ஏற்றவாறு உருவாக்குவது

ஆசிரியர்கள் எப்போதும் ஓய்வு பெறுவதில்லை. புதிய தலைமுறையினரை உருவாக்குவதில் அவர்கள் ஆவலோடு செயல் படுகின்றனர்.

சமூகம் முன்னேற வேண்டுமென்றால், ஆசிரியர்கள் காலத்தைவிட இரு மடங்கு வேகமாக செயல்படவேண்டும். ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் முக்கியபங்கு வகிக்கிறார்.

நான் குஜராத் முதல்வரான பிறகு எனக்கு இரண்டு விருப்பங்கள் இருந்தன. ஒன்று, என் ஆசிரியர்களை நேரில்சந்தித்து கவுரவிக்க வேண்டும், மற்றொன்று எனது பள்ளி நண்பர்களை சந்திக்கவேண்டும் என்பது. இரண்டையுமே நான் செய்துவிட்டேன்" என்று மோடி பேசினார்.

Tags:

Leave a Reply