தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி 100 நாட்களை கடந்து மக்களுக்கு நல்ல சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் குறிப்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது.

பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி விமர்சனம் செய்வது பற்றி யாரும் பொருட்படுத்த தேவையில்லை. தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுகிறது. ஆனால், முக்கியமான பல இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தும் பல்வேறு சம்பவங்கள் பற்றியும் மாநில தேர்தல் அதிகாரியிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்" என்றார்.

Leave a Reply