சமூக நீதியை அடைவது மட்டும்போதாது. பல்வேறு பிரிவு மக்களிடையேயும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையே முக்கிய இலக்காக கொண்டிருத்தல் வேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் தலித்மக்களின் உரிமைக்காக போராடிய அய்யன் காளியின் 152ஆவது பிறந்ததினவிழா நிகழ்ச்சி, தில்லியில் கேரள புலையர் மஹாசபை சார்பில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மோடி பேசியதாவது:

சமத்துவத்தை எட்டுவதால் மட்டும் எதையும் செய்யமுடியாது. அதற்கும்மேல் நாம் முன்னேறிச்செல்ல வேண்டும். சமூக நல்லிணக்கம் என்பதை நமது இறுதி இலக்காக கொண்டிருக்க வேண்டும். அதனை அடைவதற்கு கூடுதல் முயற்சிகளை எடுக்கவேண்டும்.

சமூக நல்லிணக்கம் என்பதை எட்டிவிட்டால், ஒருவர் அனைவருடனும் சமத்துவத்துடனும், அன்புடனும் வாழ முடியும்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தில் நிலவிய பாகுபாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதில், அய்யன்காளி, நாராயண குரு போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் முக்கியமானவையாகும்.

சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் சம அதிகாரம், உரிமை வழங்க பாடுபட்ட, பி.ஆர்.அம்பேத்கர் போன்றவர்களை நாம், நன்றியுடன் நினைக்கவேண்டும். அத்தகையவர்களால் தான் சமுதாயத்தில் வேற்றுமை மறைந்தது. அய்யன்காளி, 1913ல் மேற்கொண்ட, தலித் இனத்தவர் மேம்பாட்டு மாநாடு, 1930ல், காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரைக்கு திருப்புமுனையாக அமைந்தது.

ஒருபிராமணர் வேலை பெறுகிறார்; தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரும் வேலைபெறுகிறார். இதனால் சமுதாயத்தில் சமத்துவம் வந்துவிடுமா! அதற்காக நாம் இன்னும் நிறைய பாடுபடவேண்டும். அதன் இறுதி இலக்கு, சமுதாயத்தில் இணக்கம் நிலவவேண்டும் என்பதுதான். அதற்காக நாம், சமுதாயத்தை தொடர்ந்து விழிப்புணர்வுக்கு உள்ளாக்க வேண்டும்.அத்தகைய நல்லிணக்கத்தை ஏற்படுத்த, சமத்துவம் மற்றும் அன்புடன் இணைந்து செயல்படவேண்டும். அதற்கான உள்ளார்ந்த உயர்ந்த மன நிலையை நாம் வளர்க்கவேண்டும்.

சமுதாயத்தில் அனைவருக்கும் அனைத்தும் சொந்தம் என்பதை உறுதி செய்யும் வகையிலான அரசியல் அமைப்பை டாக்டர் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளனர். இதற்காக நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றார் மோடி.

Leave a Reply