மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சதிகாரனனான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவன் ஹஃபீஸ் சயீத் மீது வழக்கு எதுவும் இல்லை என்றும், பாகிஸ்தானில் அவர் சுதந்திரமாக எங்கு வேண்டு மானாலும் செல்லலாம் என்று அந்நாடு தெரிவித்திருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையத் அக்பருதீன், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியதாவது:

ஹஃபீஸ் சயீத் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானதாகும். மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரண கர்த்தா அவர்தான். இது தொடர்பாக இந்திய நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையில், அவர்மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரை கைதுசெய்து, நீதியின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று பாகிஸ்தானை மீண்டும் இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான 99 சதவீத ஆதாரங்கள் பாகிஸ்தானில் தான் உள்ளன. பாகிஸ்தானில்தான் அந்தத்தாக்குதல் குறித்து திட்டமிடப்பட்டது. தாக்குதலுக்கு தேவையான நிதி, பாகிஸ்தானில் இருந்தே அளிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட வர்களும், பாகிஸ்தானை சேர்ந்தவர்களே.

ஆகையால், ஹஃபீஸ் சயீத் உள்ளிட்ட மும்பை தாக்குதலில் தொடர்புடைய அனை வரையும் கைதுசெய்து, நீதியின் முன் நிறுத்தி பாகிஸ்தான் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றார் .

Leave a Reply