தேசியமகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த லலிதா குமார மங்கலம் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார் .

தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேனகா காந்தி கூறியதாவது:

சமூகத்தில் பெண்களுக்குக்காக குரல்கொடுத்து வருபவரும், தலைமை பண்புகள் நிறைந்தவருமான பா.ஜ.க.,வைச் சேர்ந்த லலிதா குமார மங்கலத்தை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தேர்வுசெய்யலாம் என்று பிரதமரும், நானும் விரும்பினோம். அந்தவகையில், இது அரசின் முடிவாகும். பெண்களின் தேவைகள், உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் லலிதா குமார மங்கலம் செயல்படுவார் என்று முழுமையாக நம்புகிறேன்.

பொது இடங்களிலும், பணி இடத்திலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன் கொடுமைகள் நடத்தப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவருக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பது, நோட்டீஸ் அனுப்புவது போன்ற அதிகாரங்கள் தேசியமகளிர் ஆணையத்துக்கு கிடைக்க வேண்டும். மத்திய அமைச்சர் என்ற முறையில் மகளிர் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்கேட்டு வலியுறுத்த எனது முயற்சி தொடரும்' என்றார் மேனகா காந்தி.

இதுகுறித்து லலிதா குமாரமங்கலம் கூறியதாவது: "தேசிய மகளிர் ஆணைய தலைவராக என்னை நியமனம்செய்து மத்திய அரசு பிறப்பித்த ஆணையை ஏற்றுக்கொண்டேன். தில்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோரைச் சந்திக்கவுள்ளேன்.

அவர்களின் அறிவுரைப்படி கட்சிப்பதவியில் நீடித்துக் கொண்டே ஆணையத்தின் தலைவர் பதவியை தொடருவதா? அல்லது கட்சி பதவியை ராஜிநாமா செய்வதா? என்று முடிவெடுப்பேன்' என்றார் அவர்.

Leave a Reply