இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினரின் ஊடுருவல்கள் தொடர்ந்து நடைபெறுவது தீவிர கவனத்துக்குரிய பிரச்னை என்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்குடன் தில்லியில் வியாழக் கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இருநாட்டு எல்லை பிரச்னைக்கு முன்னுரிமை தந்து , விரைந்து தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பைத்தொடர்ந்து, இரு நாடுகளிடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:

எல்லையில் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் (ஊடுருவல்கள்) குறித்த நமதுகவலையை நான் எழுப்பினேன். பரஸ்பர நம்பிக்கைக்கு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்த விஷயம் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

நடைமுறை எல்லைக்கோடு தொடர்பாக விளக்கமளிக்கப்படுவது, அமைதியைப் பராமரிப்பதற்கான நமது முயற்சிகளுக்கு பெரும் உதவிகரமாக அமையும் என்று நான் ஆலோசனை கூறினேன். பாதியில் நின்றுபோன, நடைமுறை எல்லைக் கோட்டைத் தெளிவுபடுத்தும் முயற்சியை மீண்டும் தொடங்குமாறு அதிபர் ஜீ ஜின்பிங்கை நான் கேட்டுக்கொண்டேன். எல்லை பிரச்னைக்கும் நாம் விரைவில் தீர்வுகண்டாக வேண்டும். சீனாவின் விசாகொள்கை, எல்லை தாண்டிய நதிகள் ஆகியவை தொடர்பான இந்தியாவின் கவலைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்த பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வுகாண்பதன் மூலம் பரஸ்பர நம்பிக்கையை புதிய உச்சத்துக்கு கொண்டுச் செல்ல முடியும் என்று நம்புகிறேன்.

இரு நாடுகளிடையே அனைத்து நிலைகளிலும் பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்துவது என்றும், உச்சி மாநாடு நிலையிலான சந்திப்புகளை அடிக்கடி நடத்துவது என்றும் நாங்கள் முடிவுசெய்துள்ளோம். அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவது என்றும் இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்த ஆண்டுக்குள் முதல்கட்ட கடல் சார் ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தையை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது என்றார் மோடி.

அதைத் தொடர்ந்து, ஜீ ஜின்பிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இருநாடுகள் இடையிலான எல்லை இன்னும் சரியாக வரையறுக்கப்படாததால், அங்கு சிலநேரங்களில் சில சம்பவங்கள் (ஊடுருவல்கள்) நடைபெறலாம். ஆனால், எல்லை தொடர்பான பல்வேறு நிலைகளிலான அமைப்புகள் மூலம் உரியவகையில் நடவடிக்கை எடுப்பதற்கும், நிலைமையை திறம்பட நிர்வகிப்பதிலும் இருதரப்பும் முனைப்புடன் உள்ளன. இதுபோன்ற சம்பவங்கள், இருதரப்பு உறவுகளில் பெரும் தாக்கத்தை உருவாக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எல்லை பிரச்னைக்கு நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வுகாண்பதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா உறுதி பூண்டுள்ளது.

இந்தியாவும், சீனாவும் ஒன்றுக் கொன்று முக்கியமான அண்டை நாடுகளாகும். இருநாடுகள் இடையே சில முக்கியமான பிரச்னைகள் உள்ளன. பரஸ்பர நல்லுறவுச்சூழலில் மேற்கண்ட பிரச்னைகளை தீர்க்க இருதரப்பும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றார் ஜீ ஜின்பிங்.

மோடி-ஜீ ஜின்பிங் இடையிலான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, இந்தியாவில் சீனத்தொழில் பூங்காக்களை அமைப்பது, ரயில்வேதுறையில் சீன முதலீடு உள்பட இருநாடுகள் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முதலீடுதொடர்பான ஒப்பந்தத்தில் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், சீன வர்த்தகத் துறை அமைச்சர் காவ் ஹூசெங்கும் கையெழுத்திட்டனர். அதன் படி, இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 2,000 கோடி அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.22 லட்சம் கோடி) சீனா முதலீடுசெய்ய உள்ளது.

இதுதவிர, ஆடியோ-விடியோ நிகழ்ச்சிகளை கூட்டாகத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய தகவல் ஒலி பரப்பு அமைச்சகமும், சீன பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சி நிர்வாகமும் கையெழுத்திட்டன. விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு, இருநாடுகளின் கலாசார நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பு, மருந்துத்துறை, மும்பை-ஷாங்காய் இடையே சகோதர நகர உறவை ஏற்படுத்துவது, ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

கைலாச மானச ரோவர் யாத்திரையை மேற்கொள்ளும் இந்தியபக்தர்கள் சிக்கிமின் நாதுலா கணவாய் வழியாக செல்வதற்கான ஒப்பந்தத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்யியும் கையெழுத்திட்டனர்.

இருதரப்பு பொருளாதார உறவுகள் குறித்து, செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது:

சீனாவில் இந்திய நிறுவனங்கள் முதலீடுசெய்யவும், பொருள்களை சந்தைப்படுத்தும் சூழலை மேம்படுத்தவும் உதவுமாறு அதிபர் ஜின் பிங்கைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இந்தியா-சீனா இடையிலான பொருளாதார உறவுகளுக்கு அதிபர் ஜீஜின்பிங்கின் பயணம் வரலாற்று வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன்மூலம், நமது உறவுகளில் புதிய சகாப்தத்தை தொடங்கமுடியும் என்றார் மோடி.

மோடிக்கு ஜீஜின்பிங் பாராட்டு: ஜீ ஜின்பிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ""மோடியுடன் நான் நடத்திய பேச்சு வார்தை பலனளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அடுத்த ஆண்டில் சீனாவுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். அவரது தலைமையின்கீழ் இந்தியா, வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டும்'' என்று தெரிவித்தார்.

Leave a Reply