இந்துக்களின் புனித தலமான கைலாயமலை மற்றும் மானசரோவர் ஏரி சீன எல்லையில் திபெத் பகுதியில் அமைந்துள்ளது. 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள கைலாய மலைக்கும், மான சரோவர் ஏரிக்கும் இந்துக்கள் சென்றுவருவதை மிகப்பெரும் புண்ணியமாக கருதி வருகிறார்கள். இந்தபகுதிக்கு இதுவரை உத்தரகாண்ட் மாநிலம் வழியாக பக்தர்கள் சென்றுவந்தனர். இந்த பாதையில் செல்வதற்கு பக்தர்கள்

மலைச்சரிவுகளிலும், காடு, மேடுகளிலும் நடந்துதான் செல்லவேண்டிய நிலை இருந்துவந்தது. வயதான பக்தர்கள் கோவேறு கழுதை மீது பயணம் செய்வார்கள். மழைக்காலங்களில் இந்த பாதையில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆனால் சீன பகுதியில் இதற்கு ஒரு மாற்றுப் பாதையும் இருக்கிறது. அந்தபாதையில் கைலாய மலைக்கு செல்லும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசு பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வந்தது. வருடந்தோறும் ஏப்ரல் மாதம் பீஜிங்கில் நடைபெறும் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான எல்லை பிரச்சினை பேச்சுவார்த்தையின் போது இந்த கோரிக்கையும் எழுப்பப்படுவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் இந்தியாவந்துள்ள சீன அதிபர் ஜின்பிங் கைலாய மலை, மானசரோவர் ஏரிக்கு செல்வதற்கான புதியபாதையை திறப்பதற்கு ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்த புதிய பாதையானது சிக்கிம்மாநிலம், ராதுலா மற்றும் ஷிகேட்ஸ் நகரம் வழியாக செல்லக்கூடியது. இந்த பாதையில் வாகனங்களில் செல்லும் அளவுக்கு சாலைவசதிகளும் உள்ளது. எனவே இந்த பாதையில் அச்சம் இன்றி, பாதுகாப்பாக பக்தர்கள் செல்லமுடியும் என்பதுடன், வயதான பக்தர்கள் எளிதாக வாகனத்திலும் சென்றுவர முடியும். மழைக் காலத்திலும் பக்தர்கள் சிரமம் இன்றி செல்லமுடியும். அதோடு பயண தூரமும், நேரமும் கணிசமாக குறையும்.

இந்த புதியபாதையை திறந்துவிட அனுமதி வழங்கியதற்காக சீன அதிபர் ஜின்பிங்குக்கு, பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி கூறியிருப்பதாவது:-

கைலாய மலை, மானசரோவர் ஏரிக்கு நாதுலா வழியாக புதிய பாதையை திறப்பதற்கு அனுமதித்த சீன அதிபர் ஜின்பிங்குக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்போதுள்ள உத்தரகாண்ட் வழியாகசெல்லும் பாதையுடன், இந்த புதியபாதையும் கூடுதலாக பயன்படுத்தப்படும்.

இந்த புதியபாதை மூலம் பக்தர்களுக்கு அதிகபலன்கள் கிடைக்கும். வாகனங்கள் மூலமே கைலாய மலைக்கும், மான சரோவருக்கும் சென்றுவர முடியும். இது குறிப்பாக வயதான பக்தர்களுக்கு மிகவும் பலன் தருவதாக இருக்கும். மழைக் காலங்களில் இது பாதுகாப்பான மாற்றுப் பாதையாகவும் இருக்கும். பக்தர்களின் பயணதூரமும், நேரமும் கணிசமாக குறையும். இதன் மூலம் இனி அதிகமான பக்தர்கள் கைலாயம் மற்றும் மானசரோவர் சென்றுவருவார்கள்.என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Leave a Reply