இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அந்நாட்டை வலியுறுத்தும் என்று தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரும், பாஜக தேசிய பொதுச் செயலருமான முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் செப்டம்பர் 18 முதல் 21-ம் தேதிவரை நடைபெறும் ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்க பா.ஜ.க சார்பில் முரளிதர ராவும், பாஜக.,வின் வெளியுறவு பிரிவு அமைப்பாளர் விஜய்ஜாலியும் கலந்து கொண்டுள்ளனர். இதையொட்டி கொழும்பில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை முரளிதர ராவ் கூறியது:

"இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று இந்திய பிரதமராக பொறுப்பேற்றவுடனேயே தன்னைச்சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இலங்கையின் அரசியல்சாசன கட்டமைப்புக்கு உள்பட்ட சமவுரிமை, மதிப்பு, நீதி, சுயமரியாதை ஆகியவை கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இதை இலங்கையின் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார். இந்தநோக்கத்தை வலியுறுத்தும் வகையில், எங்கள் இலங்கை பயணத்தை பயன்படுத்திவருகிறோம்.

கொழும்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பெரீûஸயும் இதே நோக்குடன் தான் நாங்கள் சந்தித்துப் பேசினோம். இதை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித்தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள் குடியேற்றத்துக்காக அந்நாட்டு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தியா மட்டுமின்றி உலகநாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இலங்கையில் மேலும் சிலநாள்கள் தங்கியிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக இயக்கங்களின் பிரதி நிதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம்' என்றார் முரளிதர ராவ்.

Tags:

Leave a Reply