பாஜக.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவு , காங்கிரசுக்கு மக்களிடையே ஆதரவு பெருகுகிறது, மோடி அலை ஓய்ந்து விட்டது என்று ஒருபக்கம் பத்திரிக்கைகள் எழுதி தீர்க்கிறது என்றால், மறுபக்கம் காங்கிரஸ் காரர்களின் ஆர்பரிப்பு அதைவிட கூடுதலாகவே இருக்கிறது. அதாவது 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக பின் தங்குகிரதாம், 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் எழுச்சி பெற்றுவிட்டதாம்.

3 பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுடன் சேர்த்து உத்தரபிரதேசம், குஜராத், மேற்குவங்காளம், ராஜஸ்தான், அசாம், ஆந்திரா, சத்தீஷ்கார், சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக இருந்த 33 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் சத்தீஷ்கார் மாநில சட்டசபை தொகுதி தவிர மற்ற 32 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதில் பாஜக 13 சட்டசபை தொகுதிகளிலும் , சமாஜ் வாதி எட்டு சட்டசபை தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் ,திரிணாமுல் காங்கிரஸ் , ஐக்கிய ஜனநாயக முன்னணி, தெலுங்கு தேசம் , மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்டவை தலா ஓரிடத்திலும் வெற்றிப் பெற்றுள்ளன.
பரிச்சையில் 35 ந்து சதவிதம் மதிப்பெண் எடுத்து பார்டரில் பாசான மாணவனை பாராட்டும் பெற்றோரையும் நாம் பார்த்திருப்போம் , 90 சதவிதம் மதிப்பெண் எடுத்து பெற்றோரிடம் திட்டு வாங்கும் மாணவர்களையும் நாம் பார்திருப்போம். தேறவே தேராது என்பது தேறிவிடுகிறது, மிக அதிகம் மதிப்பெண் எதிர்பார்கப்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகிறது, அனைத்தும் எதிர்பார்ப்பு மற்றும் மனம் சார்ந்ததே.

இருப்பினும் பாஜக.,வுக்கு சற்று சரிவு என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் மோடி அலை ஓய்ந்து விட்டது, செல்வாக்கு சரிந்து விட்டது என்பதை ஏற்க முடியாது. மாபெரும் நிலநடுக்கத்துக்கு பின்பே பேரலைகள் உருவாகும், அதேபோன்று மோடியின் தீவிர பிரச்சாரம் இல்லாமல் மோடி அலை உருவாகாது. கடந்த சில மாதங்களாக மோடி அலை நேப்பாள் பூட்டான், ஜப்பான் , என்று இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கும் ,பாதுகாப்புக்கும் வலுசேர்கும் விதமாக இந்திய எல்லைக்கும் அப்பால் மையம் கொண்டிருந்தது, அந்த அலை அந்நிய தேசங்களில் இருந்து சுருட்டி வந்தது பலலட்சம் கோடி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இடைத்தேர்தல் வெற்றி என்பது ஒரு நாள் கொண்டாட்டமே, எனவே இதற்கு மோடி அலை தேவையில்லை. ஆனால் சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எந்த விலை கொடுத்தேனும் வெற்றிப்பெற்றே ஆகவேண்டும் என்று அடிப்பட்ட புலியாக கங்கணம் கட்டிக்கொண்டு அலையோ அலை என்று அலைந்து வெற்றிப் பெற்றுள்ளது.

உ.பி.,யில் 11 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி 8 தொகுதியிலும் பாஜக 3 தொகுதியிலும் வெற்றிப்பெற்றுள்ளன , காங்கிரஸ் தான் போட்டியிட்ட 11 தொகுதிகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது. பல தொகுதிகளில் டெபாசிட்டே கிடைக்க வில்லை என்பது தனிக்கதை.

சமாஜ்வாதியின் இந்த வெற்றி என்பது 900 நாள் அவர்களது ஆட்சில் நடந்த கலவரங்கள், கற்பழிப்புகள், கற்பழிப்புக்கு ஆதரவான தலைவர்களின் அறிக்கைகள் , ஊழல்கள் , நிர்வாக குளறுபடிகள் அனைத்துக்கும் மக்கள் தரும் அங்கீகாரமா?.

அல்லது 100 நாளுக்குள் 100 துணை நகரங்களுக்கான திட்டம், வைர நாற்கரம் என்ற இரயில்வே நவீன மயமாக்கல். கறுப்புபணத்தை கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், ஊழல் செய்வதற்காகவே இயங்கி வந்த பல்வேறு சிறப்பு குழுக்களை கலைத்தது, மத்திய அரசு அதிகாரிகளுக்கும் , அமைச்சர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது, இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம் தராமல் ஆட்சி பணியில் அதிக கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு வழிவகுத்து தந்தது, இலவசங்கள் , இடைத் தேர்தளுக்காகவே வளர்ச்சியற்ற ஏட்டோடு மட்டுமே நிற்கக்கூடிய கவர்ச்சி திட்டங்களை அறிவிக்காமல் இருந்ததற்காக பாஜகவுக்கு மக்கள் தந்த தண்டனையா?.

பொதுவாக இந்தியா முழுவதும் ஒரு பதற்றமான அரசியல் சூழ்நிலையே  காணப்படுகிறது. பீகாரில் நித்திஷ்கும் , லாலுவுக்கும் இருக்கும் பதற்றம் பரவலாக பெரும்பாலான அரசியல் கட்சிகளிடம் காணப்படுகிறது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு அழைப்பு விடுத்த மம்தாவின் மனோநிலையும் அதுவே, உ.பி.,யில் சமாஜ்வதிக்கு ஓட்டுப் போட்டாலும் பரவாயில்லை பாஜக தோற்க வேண்டும் என்ற பகுஜன் சமாஜ்வாதியினரின் மனோநிலையும் அதுவே , இதுவே உபி.,யில் பாஜக பல தொகுதிகளில் தோற்க காரணம்.

இராஜஸ்தானில் சட்ட சபை தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற பாஜக, பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிப் பெற்ற பாஜக, இன்று இடைத்தேர்தலில் 4கில் ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. இது அந்த மாநிலத்தில் பாஜக.,வுக்கு பெருத்த சரிவே. இருப்பினும் அந்த மாநில அரசும், மாநில கட்சியும் பாஜக.,வினரிடையே ஒருங்கிணைப்பையும், மக்களின் எதிர்பார்ப்பையும் சரிசெய்யுமேயானால் இது சரிசெய்யக்கூடிய சரிவே.

குஜராத்தில் பாஜக போட்டியிட்ட 9 தொகுதிகளில் 6 இல் வெற்றிப் பெற்றுள்ளது. நரேந்திர மோடியின் தலைமையின்றி நடைபெறும் முதல் தேர்தல். இது பாஜக.,வுக்கு சரிவு அல்ல.

அதேநேரத்தில் பாஜக மேற்கு வங்கத்திலும், அஸ்ஸாமிலும் புதிய கணக்கை தொடங்கியுள்ளது. உபி , குஜராத் , இராஜஸ்தானில் ஏற்கனவே வலுவாக படர்ந்து பரவியுள்ள தாமரை கொடியில் எதிர்ப்பார்த்த பூக்கள் பூக்கவில்லை, 100 நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக பூத்து குலுங்கியதால் ஏற்ப்பட்ட சோர்வு கூட காரணமாக இருக்கலாம். ஆனால் அஸ்ஸாமிலும், மேற்குவங்கத்திலும் தாமரைக்கொடி படர்ந்து ஒரு தாமரையும் மலர்ந்துள்ளது. புதுப்பகுதியில் புதிதாக வேருன்றுவதும், பூப்பதும் சாதாரண விஷயமல்ல. அந்த மண் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது சாத்தியம். மேற்கு வங்கமும், அஸ்ஸாமும் ஏற்றுக் கொண்டுவிட்டது. இனி படர்ந்து விரிந்து பரவ வேண்டியதுதான் பாக்கி. மக்களின் இந்த மான மாற்றத்துக்கு மற்ற மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகளின் சிறந்த நிரகமும் , நரேந்திர மோடியின் மீதான நம்பிக்கையுமே காரணம் என்பதை இங்கே யாராலும் நிராகரிக்க முடியாது.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply