திரையில் நடிக்க தெரிந்தது போல நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் சிவாஜி என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிவாஜியின் 86வது பிறந்த நாள்விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில் பத்ம பூஷண் பத்மா சுப்ரமணியன், பாடகி ஜமுனா ராணி, நடிகை விஜய குமாரி, நடிகர்கள் வி.எஸ்.ராகவன், சி.ஆர். பார்த்திபன் ஆகியோருக்கு சிவாஜி கணேசன் நினைவு விருதுகளை வழங்கி மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

திரையில் நடிக்கத்தெரிந்தது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரிந்திருந்தால் அரசியலிலும் அவர் ஜெயித்திருக்கலாம். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படுகிற இன்பதுன்பங்களை திரைப்படம் மூலம் நடித்துக்காட்டியவர் சிவாஜி. நாடகங்கள் மூலம் நடித்து பாராட்டப்பட்டு 'சிவாஜி' என்கிற பட்டத்தோடு சினிமாவுக்கு வந்தார்.

1952-ல் வெளிவந்த பராசக்தி என்கிற முதல் படத்திலேயே அவரது திறமையை வெளிப்படுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மன் முதல், சுதந்திர போராட்டத் தியாகிகளான வ.உ.சிதம்பரனார், பாரதியார், பகத்சிங், திருப்பூர் குமரன் உள்ளிட்டோரை நாம் பார்த்ததில்லை. இவருடைய படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டோம்.

சிறந்த கதாநாயகனாக மட்டுமல்ல, ரங்கூன் ராதா, திரும்பிப்பார் போன்ற படங்களில் சிறந்த வில்லனாகவும் கோலோச்சியவர் சிவாஜி. அவரது உடலின் அனைத்து அவயங்களும் நடித்தன. இன்றைய நடிகர்கள் நடிப்பைக் கற்றுக்கொள்வதற்கு, சிவாஜி ஒரு பல்கலைக் கழகமாக திகழ்கிறார்.

அவருடைய பிறந்தநாளை கலையுலக விழாவாக நடிகர் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடி விருதுகள் வழங்கவேண்டும். நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகருக்கு அதுவே சிறப்பு செய்வதாக இருக்கும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.விழாவுக்கு ராம்குமார், பிரபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

Leave a Reply